ஆர்யன் கானை விடுவிக்க ஷாருக் கானிடம் ரூ.25 கோடி லஞ்சம்? - சாட்சியம் கொடுத்த அதிர்ச்சி

ஆர்யன் கானை விடுவிக்க ஷாருக் கானிடம் ரூ.25 கோடி லஞ்சம்? - சாட்சியம் கொடுத்த அதிர்ச்சி
ஆர்யன் கானை விடுவிக்க ஷாருக் கானிடம் ரூ.25 கோடி லஞ்சம்? - சாட்சியம் கொடுத்த அதிர்ச்சி
Published on

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் திடீர் திருப்பமாக, போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் 25 கோடி ரூபாய் வரை லஞ்சம் கேட்டதாக இவ்வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட நபர் குற்றம்சாட்டியுள்ளார். எனினும், இந்த புகாரை போதை பொருள் தடுப்பு அமைப்பு மறுத்துள்ளது.

மும்பை, மகாராஷ்டிரா போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட வழக்கில், தனிப்பட்ட சாட்சியமாக கோசாவி என்பவரும், அவரது உதவியாளர் பிரபாகர் செயில் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரபாகர் செயில், சிறையில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க, நடிகர் ஷாருக் கானிடம் இருந்து 25 கோடி ரூபாய் வரை போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக கூறியுள்ளார். மேலும், தன்னிடம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட வெற்று காகிதங்களில் கையெழுத்தும் வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சோதனை நடந்த இரவு, கோசாவியுடன் இணைந்து, போதை பொருள் தடுப்பு அலுவலகத்திற்கு சென்றதாகவும், அங்கு டிசோசா என்பவரை கோசாவி சந்தித்தாகவும் கூறியுள்ளார். அப்போது, ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் வரை பேரம் பேசி இறுதியில் 18 கோடி ரூபாய்க்கு முடிந்ததாகவும், அதில் எட்டு கோடி ரூபாய் போதை பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடேவுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரது இந்த குற்றச்சாட்டை போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மறப்பு தெரிவித்து, இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என கூறியுள்ளனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து பேசிய மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளருமான நவாப் மாலிக், சொகுசு கப்பலில் இருந்து போதை பொருள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும், போலியாக இவ்வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும், பிரபாகர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவை என்பதால், சிறப்பு புலனாய்வு குழு, இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதே போல் வெற்று காகிதங்களில் சாட்சியத்திடம் இருந்து கையெழுத்து பெற்றது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்திற்கு களங்கம் ஏற்படுத்தவே, இத்தகைய வழக்குகள் தொடரப்படுகிறது என்பது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவும் கூறியுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் மாநில காவல்துறை தானே முன்வந்து விசாரணை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அதுல் லாந்தேவும், மத்திய விசாரணை முகமைகளை, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து பயன்படுத்தி வருவது இதன் மூலம் நிரூபணமாகியிருப்பதாக கூறியுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே, பிரபாகர் செயில், சாட்சியமாக இவ்வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பதால், அதை பொதுவெளியில் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என போதை பொருள் தடுப்பு உயரதிகாரி முத்தா அசோக் ஜெயின் கேட்டுக் கொண்டுள்ளார். வழக்கு தொடர்பான முக்கிய தகவல்களை பிரபாகர் நீதிமன்றத்தில் தாராளமாக தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com