பாரதியாரின் நூறாவது நினைவு நாளை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா உட்பட பலரும் அவரது பெருமைகளை எடுத்துரைத்தனர்.
பாரதியாரின் நூறாவது நினைவு தினம் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினராலும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், வானவில் பண்பாட்டு மையம், இந்திரா காந்தி கலாச்சார மையம் உள்ளிட்ட சில அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம்.நாடாளுமன்றத்தின் நூலகக் கட்டடம் அமைந்துள்ள அரங்கத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பிரபல கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதனின் கச்சேரி, பேச்சாளர் பர்வீன் சுல்தானா அவர்களின் சொற்பொழிவு, மற்றும் மாணவ மாணவிகளின் பல்வேறு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் அர்ஜுன ராம்மெக்வால் பாரதியாரின் கவிதைகளை தமிழில் பாடி, அரங்கில் கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.அதைத் தொடர்ந்து பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா, சுப்பிரமணிய பாரதி, சுதந்திரப் போராட்ட வீரர், சமூக ஆர்வலர், சீர்திருத்தவாதி, பத்திரிக்கையாளர் என பல முகங்களைக் கொண்டவர் என்று புகழாரம் சூட்டினார். அதோடு, மகாகவியின் எழுத்துகள் தமிழ் இலக்கியத்தில் புதிய யுகத்தை தொடக்கி வைத்தது என்றும், பெண்ணியம் சார்ந்து அதிகம் எழுதியவர் மகாகவி என்றும், மதம், பாலினம், உள்ளிட்ட பாகுபாடெல்லாம் கடந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வினை மீண்டும் மீண்டும் பதிய வைத்தவர் பாரதியார் என்றும் கூறினார்.
அத்வானியுடன் பாரதியாரின் வீட்டிற்கு சென்றது இன்னும் தனக்கு நினைவிருக்கிறது என்றும், தன் வாழ்வின் மிகச்சிறந்த தருணங்களில் அதுவும் ஒன்று எனக் கூறியதோடு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் பாரதியாரை குறித்து பெருமைப்பட பேசியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.தமிழ் கவிஞர் ஒருவருக்கு நாடாளுமன்றத்தில் இத்தகைய நிகழ்ச்சி நடத்தப்படுவது பாரதிக்கு தான் என்பது மிகவும் பெருமைப்படத்தக்க விஷயமாக அமைந்தது.