மும்பை சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்யன் கான் போதை மருந்து கடத்தலிலும் ஈடுபட்டதாக தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்தது. அவருக்கு சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் எனவே அவருக்கு ஜாமீன் தரக் கூடாது என்றும் வாதிடப்பட்டது. மேலும் பூஜா தத்லானி என்ற பெண்ணுடன் இணைந்து இவ்வழக்கில் தனக்கு எதிரான சாட்சிகளை அழிப்பதிலும் ஆர்யன் கான் ஈடுபட்டார் என போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியது.
ஆர்யன் கான் தரப்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார். கைது செய்யப்பட்டபோது, ஆர்யன் கானிடம் எந்த போதைபொருளும் இல்லை என தெரிவித்தார். போதை பொருள் விற்பனையாளருடன் கப்பலில் இருந்த காரணத்தினால் ஆர்யன் கான் குற்றவாளி ஆகிவிட முடியாது என்றும், அவர் போதை பொருள் உட்கொண்டு இருந்தாரா? அதற்கான மருத்துவ பரிசோதனையை நடத்தி உறுதி செய்துள்ளனரா என்றெல்லாம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இதனை குறித்துக் கொண்ட உயர் நீதிமன்றம், ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தது. இதற்கிடையே, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மணிஷ் ராஜ்கரியா, அவின் சாஹூ என்பவர்களுக்கு போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.