மசூதியை நோக்கி வில் அம்பு.. ஐதராபாத் பாஜக பெண் வேட்பாளரின் செய்கை.. எழும் கண்டனங்கள்!
ஐதராபாத் நாடாளுமன்றத் தொகுதியில், சிட்டிங் எம்.பியும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசியை எதிர்த்து பாஜக சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்தான் மாதவிலதா. இவர், தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று, ஐதராபாத்தில் நடந்த ராமநவமி விழாவில் கலந்துகொண்டார். அப்போது, மசூதியை நோக்கி வில் அம்பை எய்வது போல் சைகை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. மதப்பிளவை உண்டாக்குவதைப் போல மாதவி லதாவின் செயல்பாடு இருக்கிறது என அவருக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
பிரசாரத்தின்போது வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் யாரும் சாதி, மதம் உள்ளிட்ட எதையும் வைத்து பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அனுமதியே பெறாமல் ராமநவமி பேரணி நடத்தியதோடு மட்டுமல்லாமல், மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் நடந்துகொண்ட மாதவி லதாவின் செயலுக்கு. கடும் கண்டனங்கள் எழுந்தன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் பலதரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இந்தநிலையில்தான், தற்போது மாதவி லதா தன்னுடைய செயலுக்கு மன்னிப்புக் கோரியிருக்கிறார்.