குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேரின் உடல்கள் தீவிர ஆய்வுக்கு பின்னரே அடையாளம் காணப்பட்டுள்ளது.
நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட 4 உடல்கள் அடையாளம் காணப்பட்டது தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து நடந்த காட்டேரி பகுதியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 4 பேரில் மூவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 80% தீக்காயத்துடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தில் 9 பேரின் உடல்கள் இருந்த நிலையில் 4 பேரின் உடல்கள் சிதறிக் கிடந்தன. 4 பேரின் உடல்கள் சிதறிக்கிடந்த நிலையில் சேகரிக்கப்பட்டதால் உடல்களை அடையாளம் காண பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தீவிர பரிசோதனைக்குப் பின்னரே எலும்புகளை வைத்து ஆண் மற்றும் பெண் என உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறிப்பாக எலும்பு மற்றும் ஸ்கேன் சோதனைக்குப் பிறகு 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எலும்பு, முடி ஆகியவற்றை டிஎன்ஏ சோதனை செய்வதன் மூலம் வயதை கணிக்க முடியும் என்றுமருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் எலும்புகளை வைத்து இறந்தவர் ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய முடியும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.