தமிழக காவல்துறை வரலாற்றில் உளவுத்துறையின் ஐஜியாக பெண் அதிகாரி ஒருவர் முதன் முறையாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரி ஆசியம்மாள் யார்?
தமிழக காவல்துறையில் உளவுத்துறை ஒரு முக்கியப்பிரிவு. அதில் அதிக அனுபவமும், திறமையும் கொண்டவர்களே அதிகாரிகளாக நியமிக்கப்படுவர். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த உளவுத்துறையின் ஐஜியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் காவல் அதிகாரி ஆசியம்மாள். குரூப் 1 தேர்வு மூலம் காவல்துறையில் அதிகாரியாக பணிக்குச் சேர்ந்த இவருக்கு வயது 56. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொங்கராயக்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆசியம்மாள், எம்.எஸ்.சி, எம்.டெக் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றவர்.
வரதட்சணை கொடுமை தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக தனது காவல்துறை வாழ்க்கையை தொடங்கிய இவர் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு, உளவுத்துறையின் எஸ்.பி.சி.ஐ.டி பிரிவு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்டவற்றில் எஸ்.பியாக பணி புரிந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற இவர், போலீஸ் பயிற்சிப் பள்ளி மற்றும் தொழில்நுட்ப பிரிவில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் உளவுத்துறையின் டிஐஜியாக கடந்த மே மாதம் ஆசியம்மாள் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
ஆசியம்மாள். பல்வேறு பிரிவுகளில் அனுபவம் கொண்ட அவருக்கு உளவுத்துறையின் ஐஜியாக தமிழ்நாடு அரசு பதவி உயர்வு அளித்துள்ளது. தமிழக காவல்துறை வரலாற்றில் பெண் அதிகாரி ஒருவர் உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.