‘2 விரல் பரிசோதனை முறை’ கோவை விமானப்படை பெண் அதிகாரி புகார் - தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

‘2 விரல் பரிசோதனை முறை’ கோவை விமானப்படை பெண் அதிகாரி புகார் - தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
‘2 விரல் பரிசோதனை முறை’ கோவை விமானப்படை பெண் அதிகாரி புகார் - தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
Published on

கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விமானப் படை பெண் அதிகாரி தனது புகாரை திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி கோவை விமானப்படை நிர்வாகவியல் கல்லூரியின் கமாண்டண்டால் பல முறை கட்டாயப்படுத்தப்பட்டதாக காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரி விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார், இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விமானப்படை பெண் அதிகாரி காவல்துறையிடம் அளித்த புகாரில் தாம் கடந்த 10ஆம் தேதி அதிகாலை பிளைட் லெப்டினண்ட் அமிதேஷ் ஹர்முக் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபர் பெண் அதிகாரியின் இரண்டு நண்பர்களிடம் பேசியதாகவும், அவர்கள் இருவரும் அந்த உரையாடலை பதிவு செய்திருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பாக விங் கமாண்டரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அவர் அந்த பெண் அதிகாரியின் அறைக்கு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பின்னர் வந்த மற்றொரு பெண் விங் கமாண்டர், பாதிக்கப்பட்ட பெண் தனது நற்பெயர் மற்றும் தனது குடும்பத்தின் நற்பெயர் குறித்து சிந்திக்கவேண்டும் என அறிவுறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கூறியுள்ளார். அதன் பின்னரே விரும்பினால் புகார் அளிக்கும்படியும், தமது முடிவை அடுத்த நாள் காலையில் தெரிவிக்கும்படி அந்த இரண்டு அதிகாரிகளும் தம்மிடம் கூறியதாகவும் பெண் அதிகாரி புகாரில் கூறியுள்ளார். தமது அடையாளம் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் தாம் புகார் எதுவும் அளிக்க விரும்பவில்லை என நண்பர் ஒருவர் மூலம் பெண் விங் கமாண்டரிடம் செப்டம்பர் 11ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தெரிவித்துள்ளார். அதே நாள் பிற்பகலில் அவரை சந்தித்த இரண்டு விங் கமாண்டர்களும் ஒன்று புகார் அளிக்கும்படியும் அல்லது சம்பவம் இருவரின் சம்மதத்துடன் நடைபெற்றது என எழுதி கொடுக்கும்படியும் வலியுறுத்தியதாக பெண் அதிகாரி கூறியுள்ளார். அதன் பின்னர் அந்தப் பெண் அதிகாரி புகார் அளித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பதை கண்டறிய இரண்டு விரல் பரிசோதனை முறை பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த பரிசோதனை முறை உச்சநீதிமன்றத்தால் தடை செயப்பட்டது தமக்கு பின்னரே தெரிய வந்ததாகவும் பெண் அதிகாரி கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வன்கொடுமை நிகழ்ந்த நாளில் தமது அறையில் பயன்படுத்தப்பட்ட பெட்ஷீட்டை இரண்டு பெண் மருத்துவர்களிடம் அளித்ததாகவும், குற்றம்சாட்டப்பட்டவரின் விந்தணுக்கள் இருந்த படுக்கை விரிப்பை எடுத்துக்கொள்ளும்படி அதிகாரிகளிடம் கூறியதாகவும் பெண் அதிகாரி கூறியுள்ளார். அதே நாள் இரவில் பாதிக்கப்பட்ட பெண் வேறு அறைக்கு மாற்றப்பட்டதாகவும், வன்கொடுமை நடைபெறவில்லை என பரிசோதனை முடிவுகள் வந்திருப்பதாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் பெண் அதிகாரி கூறியுள்ளார்.

இதன் பின்னர் ஒரு குரூப் கேப்டனும், ஒரு விங் கமாண்டரும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசி புகாரை திரும்பப்பெறுவது குறித்து அன்றே முடிவெடுக்கும்படி அவசரப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் கல்லூரி கமாண்டண்ட்டை சந்தித்து குற்றம்சாட்டப்பட்ட நபர் வளாகத்திலிருந்து வெளியேறுவாரா என கேட்டதாகவும், அவ்வாறு வெளியேறாவிட்டால் தாம் வெளியேற விரும்புவதாகவும் கூறியதாக பெண் அதிகாரி கூறியுள்ளார். ஆனால் தம்முடைய புகாரை திரும்பப்பெறுவதாக எழுத்துப்பூர்வமாக தரும்படி கமாண்டண்ட் கேட்டதாகவும், அதன் பின்னரே கோவை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்ததாகவும் பெண் அதிகாரி கூறியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விமானப்படை பெண் அதிகாரி கொடுத்க புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள கோவை காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் பெண் அதிகாரி பாலியல் புகார் அளித்தும் விமானப்படை பயிற்சி கல்லூரி உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டதும் புகாரின் மீதும் அலட்சியமாக செயல்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com