வாரிசு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், “இப்பதான் முதன் முறையா சூப்பர் ஸ்டார் கூட நடித்திருக்கிறேன்” என விஜய்யை புகழ்ந்திருக்கிறார்.
வாரிசு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை பிரசாத் லேப்-ல் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர்கள் சரத்குமார், ஷாம், விடிவி கணேஷ், சங்கீதா, பாடலாசிரியர் விவேக், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், இசையமைப்பாளர் தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய சரத்குமார், “வாரிசு படத்தில் நடிப்பதற்காக அந்த படத்தின் கதையை என்னிடம் வம்சி சார் சொன்னார். அவர் சொன்னவுடன் சரி என்று நான் சொல்லிவிட்டேன். அவர் இந்த கதையை எப்படி எடுக்கப்போகிறேன் என்று சொல்லும்போதே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் இந்த படத்தில் ஒரு சூப்பர் ஸ்டாரோட அப்பாவாக நடிக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக நான் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தாலும், நான் நிறைய திரைப்படங்கள் பண்ண வேண்டும் அப்போதுதான் மீண்டும் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியும் என்ற நிலையில், இந்த படத்தில் நான் விஜய்யுடன் நடிக்கும் போது நான் அடுத்த தலைமுறையை நோக்கி பயணிக்கிறேன். இன்னும் நிறைய படங்களை நடிக்க தயாராக இருக்கிறேன். இயக்குநர்களுக்கு வேண்டிய நடிப்பை, என்னால் வழங்க முடியும். அதற்காக இப்போதும் எப்போதும் காத்திருக்கிறேன்.
தமிழா? தெலுங்கா? முதல்ல நாம இந்தியர்கள்:
வாரிசு படத்தை உருவாக்கிய தில் ராஜூ சார் அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் தில் ராஜ் படத்தில் கதையை முழுமையாக கேட்டு எந்த மாதிரியான கதை யாருக்கு எப்படி பொருத்தமாக இருக்கும் என ஆய்ந்து படமெடுக்கும் ஒரு ரியல் பிலிம் மேக்கர். தினமும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அனைவரையும் உற்சாகப்படுத்துவார். தயாரிப்பாளர் படப்பிடிப்பு தளத்திற்கு வருவது வரப்பிரசாதம். தில் ராஜூ சார் தயாரித்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கிய அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
நாம் எல்லோரும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி என எந்த மொழி பேசினாலும்... அதையெல்லாம் பிரித்து பார்க்க கூடாது. நாம் எல்லோரும் முதலில் இந்தியர்கள். பிரித்து பார்த்தால், இந்தியா ஒன்றாக இருக்காது. எல்லோரும் சினிமாவுக்கு செல்கிற ரசிகர்கள்! அதுமட்டுமே! நாமெல்லாம் இன்று பேன் - இந்தியா படம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்திய திரைக்கலைஞர்கள் நாம்.
என்னோட வாரிசே வாரிசு படம் தான் பார்த்தான்:
வாரிசு படத்தில் குடும்பமாக நடித்தது மட்டுமல்ல குடும்பமாகவே வாழ்ந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்காக வம்சி சாருக்கு பாராட்டு. இந்த படத்தைப் பார்த்த எல்லோரும் என்னிடம் `சார் இரண்டாவது தடவ பார்க்கிறோம் சார், மூன்றாவது தடவ பார்க்கிறோம் சார்’ என்று சொன்னார்கள். எனது நண்பர்கள் மூன்றாவது முறையாக படத்தை பார்த்தார்கள். இந்தப் படம் அவர்களுக்கு பிடித்திருந்தது. வாரிசு படத்தை என்னுடை வாரிசும் வந்து பார்த்துவிட்டு பாராட்டினான்! இதற்காக வம்சி சாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பல ஆண்டுகளாக பாத்துக்கிட்டு இருக்கேன் விஜய் ஒரு டெடிகேட்டட் ஆர்டிஸ்ட்:
நான் விஜய்யை பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன். விஜய் ஒரு டெடிகேட்டட் ஆர்டிஸ்ட். இதனால்தான் அவர் நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இந்த படத்தில் ஒரு அப்பாவாக நான் விஜய்யின் கையைப்பிடித்து `எனக்கொரு நிம்மதியான சாவை கொடுப்பையா’ என சொல்லும் போது, அதுவரையிலும் அமைதியாக கேட்டக் கொண்டிருந்தவரின் கண்களில் கண்ணீர் வந்ததை காண முடிந்தது.