சிவகங்கை: அபூர்வ சிறுநீரக நோயால் அவதிப்படும் 10 ஆம் வகுப்பு மாணவி

சிவகங்கை: அபூர்வ சிறுநீரக நோயால் அவதிப்படும் 10 ஆம் வகுப்பு மாணவி
சிவகங்கை: அபூர்வ சிறுநீரக நோயால் அவதிப்படும் 10 ஆம் வகுப்பு மாணவி
Published on

பிறந்தது முதலே அபூர்வ சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறார் 10 ஆம் வகுப்பு மாணவியான இலக்கியா. மற்றவர்களை போல தங்கள் மகளும் சகஜமாக விளையாட மாட்டாளா? இயல்பாக இருக்க மாட்டாளா? என்ற ஏக்கத்துடன் குணமாக்கும் முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர் அவரது பெற்றோர். அவர்களது கண்ணீர் கதை குறித்து பார்ப்போம். 

சிவகங்கையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது கொட்டக்குடி கிராமம். இங்கு வசிக்கும் மாரிமுத்து, கலையரசி தம்பதியின் ஒரே மகள் இலக்கியா. சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

பார்ப்பதற்கு இயல்பாக இருந்தாலும் அபூர்வ வகை சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறார் இலக்கியா. இதற்காக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு அவரது உடலுக்குள் மருத்துவ குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், பிற மாணவிகளை போல விளையாட்டில் ஈடுபடுவதா, வீட்டு வேலைகளை செய்வது என்பதோ இலக்கியாவுக்கு எட்டாக் கனி தான்.

பிறந்தது முதலே இந்த அபூர்வ நோயால் அவதிப்பட்டு வரும் இலக்கியாவை குணப்படுத்த, அவரது பெற்றோர் ஏறாத மருத்துவமனைகள் இல்லை. 6 மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் சிகிச்சை அளித்தால் தான் காப்பாற்ற முடியும். அதற்காக ஒவ்வொரு முறையும் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை செலவாகும். தினம் 200 ரூபாய்க்கு கூலி வேலை செய்யும் மாரிமுத்து, மகள் மீதான பாசத்தால் செலவழித்து இத்தனை நாளாக அவரை காப்பாற்றி வருகிறார்.

இந்தச் சூழலில் தான் நவீன அறுவை சிகிச்சை மூலம் இலக்கியாவை குணப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார் அறுவை சிகிச்சை நிபுணரான குமரேசன். ஆனால் நவீன சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்றும் அவர் கூறுகிறார்.

இலக்கியாவுக்கு எப்படியாவது அறுவை சிகிச்சை செய்து அவரை குணப்படுத்திவிட வேண்டும் என தங்களால் இயன்ற உதவியை பள்ளி ஆசிரியர்களும் வழங்கி வருகின்றனர். அதே நேரத்தில் அரசும், தன்னார்வலர்களும் தங்களது குழந்தையை காப்பாற்ற முன் வரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றனர் இலக்கியாவின் பெற்றோர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com