சென்னை திருவொற்றியூரில் குப்பையில் கிடைத்த நூறு கிராம் தங்க நாணயத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருவொற்றியூர் அண்ணாமலை நகரை சேர்ந்த கணேஷ் ராமன் என்பவர் கடந்த மார்ச் மாதம் நூறு கிராம் தங்க நாணயத்தை வாங்கியிருந்தார். வீட்டில் பழைய நெகிழிப்பையில் அதை சுற்றி வைத்திருந்த நிலையில், குடும்பத்தினர் தங்க நாணயத்தை கவனிக்காமல் குப்பையுடன் சேர்த்து, வெளியே வீசிவிட்டனர். அதிர்ச்சி அடைந்த கணேஷ் ராமன், உடனடியாக சாத்தங்காடு காவல்நிலையத்தில் தங்க நாணயத்தை தொலைத்துவிட்டது குறித்து புகார் அளித்திருந்தார். இந்நிலையில், திருவொற்றியூர் நகராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் மேரியின் கண்களில் அந்த நெகிழிப்பை தென்பட்டது. அதை பிரித்து பார்த்தபோது, நூறு கிராம் தங்க நாணயம் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். உடனடியாக தனது மேற்பார்வையாளரிடம் மேரி தகவல் தெரிவித்துவிட்டு, சாத்தாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்.
கணேஷ் ராமன் தொலைத்த நூறு கிராம் தங்க நாணயம் தான் அது என தெரியவர, உடனடியாக அவருக்கு தகவல் அளித்து, காவல்துறையினர் ஒப்படைத்தனர். ஏழ்மையான சூழலில் நூறு கிராம் தங்க நாணயம் உரியவரிடம் சென்று சேரவேண்டும் என்ற நோக்கில், காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் மேரியின் செயலை, பலரும் பாராட்டி வருகின்றனர்.