சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் அடையாறு ரசாயனக்கழிவுகள் மற்றும் நெகிழிக் கழிவுகளால் பாழ்பட்டு, கடல் வளத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதுபற்றிய ஒரு விரிவான தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
வண்டலூருக்கும் செம்பரம்பாக்கத்திற்கும் இடையில் மணிமங்கலம் என்னுமிடத்தில் பிறக்கும் ஆறு, அடையாறு. செம்பரம்பாக்கம் ஏரி உள்பட சுமார் 100 ஏரிகளின் உபரி நீர் இந்த ஆற்றில் கலந்து சென்னை பெருநகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சுமார் 45 கிலோ மீட்டருக்கு பயணித்து, சீனிவாசபுரம் - பெசன்ட் நகர் இடையே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ரோமானியர்களின் வணிகமும், ஆங்கிலேயர்களின் படகுகளும் பயணித்த இந்த பெருமைமிகு அடையாறு இன்று நெகிழிக் குப்பைகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளின் கழிமுகமாகிவிட்டது.
சென்னையின் பிரதான நீர்நிலைகளிலிருந்து ஆண்டுக்கு 11 புள்ளி 6 டிரில்லியன் நுண் நெகிழி துகள்கள் வெளியேற்றப்படுவதாக ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை ஐஐடி, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், திரு.வி.க.பாலம் உள்ளிட்ட யின் முக்கிய நீர் நிலைகளில் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அதன் படி, அடையாற்றில் சராசரியாக ஒரு லிட்டருக்கு 0.4 நுண் நெகிழி துகள்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையிலிருந்து கோட்டூர்புரம் வரையிலான அடையாற்றில் ஒரு லிட்டருக்கு 1.32 நுண் நெகிழி துகள்கள் இருப்பதாகவும், கொசஸ்தலை ஆற்றில் லிட்டருக்கு 0.67 மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாகவும் ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 11.6 டிரில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் அடையாற்றிலிருந்து மட்டும் வெளியேற்றப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்திறனை மேம்படுத்தவில்லை எனில், கடல்வளம் பாதிக்கப்படு்ம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பாலிதீன் பைகளாக, குடுவைகளாக, பைபர் துகள்களாக, பாலிமர் பொருள்களாக, நீரில் கலக்கும் நெகிழி குப்பைகளால் கடல் வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் என்று கவலை தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 40 வருடங்களாக சென்னையின் பிரதான நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் தீட்டப்பட்டும், அவை முழுமையாக செயல் வடிவத்திற்கு வராததன் காரணமாக சென்னையின் நதிகள் மைக்ரோ பிளாஸ்டிக்குகளை உற்பத்தி செய்யும் மையங்களாகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவக்கழிவுகள் மற்றும் வீட்டுக்கழிவுகளை வெளியேற்றும் கழிமுகங்களாக அடையாறு மாறிவிட்டது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். லண்டன் தேம்ஸ் நதி மீட்கப்பட்டது போன்று அடையாறு எப்போது மீட்கப்படும் என்பதே அனைவரது மனதில் எழுந்திருக்கும் கேள்வி.