தொழில் அதிபர்களோ, தொழில் முனைவோர்களோ முதலாளிகள் என்ற நிலையை தாண்டி தொழிலாளர்களுக்கு இணையாகவும், தொழிலாளர்களாகவும் வேலை செய்தால் மட்டுமே இலக்கை எட்டுவதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர்களுக்கு ஏற்படக் கூடிய சிரமங்கள் என்னென்ன என்பதையும் அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்பட முடியும்.
இப்படி இருக்கையில், இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒருவர் மற்ற டெலிவரி ஊழியர்களை போல தானே களத்தில் இறங்கி வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
இதனை வேலைவாய்ப்புக்கான Naukri.com நிறுவனத்தை நடத்தும் Info Edge-ன் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி ட்விட்டரில் பதிவிட்டு தனது ஆச்சர்யத்தை பகிர்ந்திருக்கிறார். அதில், “ஸொமேட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ தீபேந்தர் கோயல் மற்றும் ஸொமேட்டோ நிறுவன குழுவினரை சந்திக்க நேர்ந்தது.
அப்போது தீபேந்தர் உட்பட அனைத்து மூத்த அதிகாரிகளும் ஸொமேட்டோ சீருடை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு அவர்களாகவே பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்வது குறித்து அறிந்தது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை தங்களை எவருமே அடையாளம் கண்டதில்லை என தீபேந்தர் என்னிடம் கூறினார். மூன்று மாதத்திற்கு ஒரு முறை என கடந்த மூன்று ஆண்டுகளாக தீபேந்தர் உள்ளிட்ட ஸொமேட்டோ குழுவினர் இதனை செயல்படுத்தி வருகிறார்கள்” என சஞ்சீவ் குறிப்பிட்டுள்ளார்.
சஞ்சீவின் இந்த ட்வீட் சில மணிகளிலேயே நூற்றுக்கணக்கான நெட்டிசன்களை கவனத்தை பெற்றதோடு, ஸொமேட்டோ சீ.இ.ஓ தீபேந்தரின் இந்த செயலுக்கு பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே தீபேந்தர் கோயலின் ட்விட்டர் பயோவில் CEO என்றில்லாமல் ஸொமேட்டோ மற்றும் ப்ளிங்கிட்டின் டெலிவரி பாய் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.