சுவாரஸ்யமான ட்விட்டுகள், ஜாலியாக வாடிக்கையாளர்களிடம் உரையாடுவது என்று எல்லா வகையிலும் நெட்டிசன்களின் மனதை கவர்ந்த ZOMATO Twitter, தற்போது மற்றுமொரு விஷயத்துக்காக பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த ட்வீட்டில் ZOMATO ஊழியரான விக்னேஷ், போட்டித்தேர்வில் வெற்றிப்பெற்றதற்காக அவருக்கு பாராட்டை தெரிவித்துள்ளது ZOMATO. விக்னேஷ், பகுதி நேரமாக டெலிவரி வேலைசெய்து தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார். இதுபற்றி ZOMATO தன் ட்வீட்டில், அவர் தன் பெற்றோரோடு இருக்கும் படத்தை பகிர்ந்து, “zomato வில் பணிப்புரிந்து கொண்டே, தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தேர்வை க்ளியர் செய்த விக்னேஷூக்கு, நீங்களும் உங்கள் பாராட்டை சொல்லுங்கள்” என்று கூறியுள்ளது.
இருப்பினும் விக்னேஷ், தான் TNPSC தேர்வில் வெற்றிப்பெறவில்லை என்றும், New India assurance AO (Administrative officer)-க்கான தேர்வில் வெற்றிபெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை, 116.7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பதிவைப் பார்த்துள்ளனர். நெட்டிசன்களிடமும் விக்னேஷ் பாராட்டை பெற்றுவருகிறார். ஒரு ட்விட்டர் பயனாளி, “விக்னேஷ் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர். கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும் என்பதற்கு இவர் ஒரு சான்று” என்றுள்ளார். மற்றொருவர், “வீட்டில் அமர்ந்து படிப்பில் முழு கவனம் செலுத்துபவர்கள் மத்தியில் இந்த மாதிரியானவர்களின் வாழ்க்கை 24 மணி நேரமும் போராட்டம் நிறைந்ததாகவே இருக்கிறது” என்றுள்ளார். இன்னும் பல பயனர்கள் தங்களின் ட்வீட் வழியே விக்னேஷூக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
- Jenetta Roseline