மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரரும் முன்னாள் அமைச்சருமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி மர்மமான முறையில் இறந்துள்ளார்.
கடப்பாவில் உள்ள தனது வீட்டில் அவர் தனியாக இருந்துள்ளார். இன்று காலை பணியாட்கள் வேலைக்காக வந்தபோது நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை என்பதால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவர்கள் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தபோது வீட்டின் குளியல் அறையில் இறந்து கிடந்தார். தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
தகவலறிந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது தாய் விஜயம்மா ஆகியோர் விவேகானந்த ரெட்டியின் வீட்டுக்கு விரைந்தனர். பிரேதப் பரிசோதனையில் அவர் கத்தியால் குத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான காயங்களும் உடலில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘போஸ்ட் மார்டம் தகவலில் முதல் கட்ட தகவலின்படி ஒய்.எஸ் விவேகனந்தா கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. அவரது உடலில் 7 காயங்கள் காணப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
68 வயதாகும் விவேகானந்த ரெட்டி ஆந்திர மாநில அமைச்சராக இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் தனது சகோதரர் தொடங்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்தார். மூன்று முறை மக்களவை எம்பியாகவும் அவர் இருந்துள்ளார். புலிவெண்டலு தொகுதி தேர்தல் பரப்புரை குறித்து கடந்த இரண்டு தினங்களாக ஜெகன் மோகன் ரெட்டியுடன் விவேகானந்த ரெட்டி விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் விவேகானந்த ரெட்டி உயிரிழந்திருப்பது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.