சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்சர்களாக இருக்கும் பயனர்கள் பெரும்பாலானோர் வித்தியாசமாக, விநோதமாக புரோமோஷன் செய்வது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் எனர்ஜி பானம் ஒன்றின் விளம்பரத்துக்காக 3.15 கோடி ரூபாய் மதிப்புடைய லம்போர்கினி காரனை க்ரேன் வைத்து தகர்த்திருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ தனது இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்து பக்கங்களிலும் பகிர்ந்திருக்கிறார் யூடியூபரான மிகைல் லிட்வின். அதில், லிட் எனர்ஜி என்ற பானத்துக்கான புரோமோஷனுக்காக தனது 3.15 கோடி ரூபாய் மதிப்புள்ள அதி சொகுசு வசதிக்கொண்ட வெள்ளை நிற லம்போர்கினி SUV காரை துண்டுத்துண்டாக நொறுக்கியிருக்கிறார்.
குறிப்பாக, லிட் எனர்ஜி பானம் போல உருவாக்கப்பட்ட கார் அளவு கொண்ட கேன் ஒன்றினை க்ரேனில் கட்டில் அதனை வைத்து லம்போர்கினி காரை நொடிப்பொழுதில் சுக்கு நூறாக்கியிருக்கிறார். இதனைக் கண்ட இணைய வாசிகள் பலரும் லிட்வினின் செயலுக்கு கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.
அதில், இத்தனைக் கோடி மதிப்புள்ள காரை விளம்பரத்துக்காக தகர்த்தெறிவதற்கு பதில் அதற்கான பணத்தை ஆதரவற்றவர்களுக்காகவோ உணவில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்காகவோ செலவிட்டிருக்கலாம் என தெரிவித்திருக்கிறார்கள்.