கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாளை தர்ணா போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி எம்எல்ஏக்கள் 13 பேர் ராஜினாமா செய்ததையடுத்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இரு கட்சிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பாஜகதான் அரசியல் குழப்பத்திற்கு காரணம் எனக் கூறப்படும் நிலையில் பாஜக மூத்த தலைவரான சதானந்த கவுடா விளக்கம் அளித்துள்ளார். ஆரம்பக்கட்டத்தில் எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழுக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் தற்போது எம்எல்ஏக்கள் ராஜினாமாவின் பின்னணியில் நாங்கள் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என பாஜக நிர்வாகிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, அரசியல் குழப்பத்திற்கு காரணமான கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்றும் இது தொடர்பாக நாளை கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தின் முன்பாக தர்ணா போராட்டத்தில் பாஜக தொண்டர்கள் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.