இரண்டாம் உலகப் போரின் போது போரிட்ட சீன வீரரின் கழுத்தில் 80 ஆண்டுகளாக துப்பாக்கி குண்டு ஒன்று இருந்தது அண்மையில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே மூலம் தெரிய வந்திருக்கிறது. இங்கிலாந்தின் டெய்லி ஸ்டார் அறிக்கையின் படி, ஜாவோ ஹி என்ற 95 வயதான முதியவரின் கழுத்தில்தான் தோட்டா இருந்திருக்கிறது. இவர் முன்னாள் சீன ராணுவத்தில் பணியாற்றியவராம்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜாவோவின் உடலில் புல்லட் பதிந்திருக்கிறது. அந்த சமயத்தில் இருந்த குழப்பம் காரணமாக ஜாவோ தன் உடலில் புல்லட் இருந்ததை உணரவில்லை. இந்த நிலையில், அண்மையில் சீனாவின் ஷான்டாங்கில் உள்ள மருத்துவமனையில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேவின் மூலம் தோட்டா இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியுற்றிருக்கிறார்கள். இது 8 தசாப்தங்களாக ஜாவோவின் கழுத்தில் இருந்திருக்கிறது என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அப்போது உடன் இருந்த ஜாவோவின் மருமகன் வாங், போரின் போது பலமுறை ஜாவோ சுடப் பட்டிருக்கிறார் என்றும், அவர் உடலில் துப்பாக்கி குண்டு இருந்ததையும் அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய மாமனாரின் உடலில் போரில் ஏற்பட்ட காயத்தின் அடையாளங்கள் இருப்பதையும் கண்டிருக்கிறார்.
“போர் ஒன்றில் காயமடைந்த தோழரை ஆற்றின் குறுக்கே சுமந்து செல்லும் போது அவர் காயமடைந்தார். அவரது உடலின் மற்ற பகுதிகளிலும் துண்டுகள் உள்ளன” என்று வாங் கூறியிருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட 77 ஆண்டுகளாக ஜாவோவின் உடலில் துப்பாக்கி குண்டு இருந்த போதிலும் அதனால் அவரது உடல்நிலைக்கு எந்த தீங்கும் ஏற்பட்டிருக்கவில்லை என்று மருத்துவர்கள் கூறியிருப்பது மேலும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபோக அதனால் அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால் தோட்டாவை அகற்ற வேண்டாம் எனவும் மருத்துவர்கள் முடிவெடுத்திருக்கிறார்களாம். ஏனெனில் அவரது வயதை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை செய்தால் மேலும் ஆபத்தே விளையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை ஜாவோவிடமும் மருத்துவர்கள் எடுத்துச் சொல்ல அவரும் அதற்கு ஒப்புக்கொண்டதோடு, “இத்தனை ஆண்டுகளாக நான் ஆரோக்கியமாகதான் இருந்தேன். எனவே இப்போது எதையும் மாற்ற எந்த காரணமும் இல்லை” என ஜாவோ கூறியிருக்கிறார்.
ஜாவோ ஹி தனது பதின்ம வயதில் சீனாவின் சிப்பாயாக ராணுவ படையில் இணைந்தார். 1950களில் வட கொரியாவின் பக்கத்தில் நடந்த கொரியப் போர் உட்பட இரண்டு போர்களில் ஜாவோ பங்கேற்றிருந்தார். மற்றொன்று அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராகப் போரிட்டது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.