தமிழக தனித்துவ கல்வி முறையை அழிக்கிறது நீட்: அமெரிக்க தமிழர்கள் எதிர்ப்பு

தமிழக தனித்துவ கல்வி முறையை அழிக்கிறது நீட்: அமெரிக்க தமிழர்கள் எதிர்ப்பு
தமிழக தனித்துவ கல்வி முறையை அழிக்கிறது நீட்: அமெரிக்க தமிழர்கள் எதிர்ப்பு
Published on

நீட் தேர்வு முறை தமிழகத்தின் தனித்துவமான மருத்துவக் கல்வியையும் சுகாதார முறையையும் அழிக்கக்கூடியது என அமெரிக்க வாழ் தமிழர்களை உள்ளடக்கிய உலகத் தமிழ் அமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உலகத் தமிழ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவிலுள்ள தமிழர்களாகிய நாங்கள் தமிழ்நாட்டின் கல்விச்சூழலால் உருவாக்கப்பட்டு மருத்துவர்களாகவும்,பொறியாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் பிற துறைகளின் வல்லுநர்களாகவும் அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் உயர்கல்வி, தொழிற்கல்வி உள்பட கல்வித்துறை மேலும் மேம்படவேண்டும் என்பதில் எங்களுக்கும் உடன்பாடே. ஆனால் பல ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு அரசும் கல்வியாளர்களும் தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதாரச் சூழல்களினூடாக வளர்த்தெடுத்த மருத்துவக்கல்வி உள்பட கல்விமுறையை மத்திய அரசு துச்சமென மதிப்பதையும் அழிப்பதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நமது மருத்துவக் கல்வியானது தமிழ்நாட்டிலும் உலகெங்கிலும் மிகச்சிறந்த மருத்துவர்களை பல்லாயிரக்கணக்கில் உருவாக்கியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

நீட் தமிழ்நாட்டின் நலன்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கும் ஊர்புற மாணவர்களுக்கும் எதிரானது. அது இந்தியக் கூட்டாட்சித் தன்மைக்கும் எதிரானது. மருத்துவக் கல்லூரிகளை அமைத்தல், அவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டம் இயற்றுதல், நுழைவுத்தேர்வு முறையை சீராய்வுகளுக்குப்பின் நீக்குதல், மருத்துவ உயர்கல்விக்கும் ஊர்புற மருத்துவச்சேவைக்கும் தொடர்பு உருவாக்குதல் என தமிழ்நாடு தனது பட்டறிவின் அடிப்படையில் முடிவெடுத்து இந்தியாவிலேயே மிகச்சிறந்த மருத்துவக் கல்வி முறையை உருவாக்கியிருக்கிறது. அது மிகச்சிறந்த சுதாதார உள்கட்டமைப்பையும் தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறது. எனவே நீட் தேர்வு முறை நமது தனித்துவமான மருத்துவக் கல்வியையும் சுகாதார முறையையும் அழிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதாகவே அமெரிக்கத் தமிழர்களாகிய நாங்கள் கருதுகிறோம். அமெரிக்கத் தமிழர்கள் உள்பட உலகத்தமிழர்கள் அனைவரும் இவ்விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளுக்காக நிற்கிறோம் என்பதை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

உலகத் தமிழ் அமைப்பின் இந்த அறிக்கையை வெளியிடுவதற்காக செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. உலகத் தமிழர் அமைப்பின் சார்பில் கொழந்தவேல் இராமசாமி, தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெ.மணியரசன், தியாகு, சீமான், வேல்முருகன், ஆழிசெந்தில்நாதன், வழக்கறிஞர் பாலு, ஜவாஹருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அந்த அறிக்கையை வெளியிட்டனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com