மதுரை மாவட்டம் மேலூரில் கியர் கம்பிக்கு பதிலாக மரக்குச்சியை வைத்து அரசு பேருந்து இயக்கப்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 53 பேருந்துகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ள அரசு நகர பேருந்துகள் ஓட்டை உடைசலான பேருந்துகளாகவே உள்ளதாக புகார் எழுந்துள்ளது. நடுவழியில் நிற்பதும் , மழை நீர் பேருந்தினுள் வடிவதும் , இங்கு வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில் போக்குவரத்துக்கு பயனற்ற பேருந்து ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் பயணிகளுடன் இயங்குவது பேருந்து பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலூரில் இருந்து சேக்கிப்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்தின் நிலைதான் இது. பேருந்தின் கியர் கம்பி உடைந்து விட்ட நிலையில், அதற்கு பதிலாக மரக்குச்சியை பயன்படுத்தி ஆபத்தை உணராமல் பேருந்து இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மரக்குச்சி கழன்று விடாமல் இருக்க பயணி ஒருவர் அதனை பிடித்தவாறு பயணித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த அதி நவீன பேருந்து குறித்து ஓட்டுநரிடம் கேட்டதற்கு, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் மாற்று பேருந்துக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றும் வேறு வழியில்லாமல் இப்படி பேருந்தை இயக்கும் நிலை ஏற்பட்டதாகவும் ஓட்டுநர் தெரிவித்தார்.
மரக்குச்சி கியரை புகைப்படம் எடுத்து பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றது. ஆபத்தை உணர்ந்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது