உலகம் நவீன மயத்தை நோக்கி ரன்.. ரன்.. என ஓடிக் கொண்டிருக்கையில் பணி நிமித்தமான சங்கடங்கள் இல்லாத அலுவலகங்களோ, இடங்களோ இருப்பது அரிதிலும் அரிது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் விழும் அடியை போல 9-5 வேலையாக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தே பணியாற்றும் வேலையாக இருந்தாலும் சரி எந்நேரமும் ஏதேனும் பஞ்சாயத்தாகவே இருந்துக் கொண்டிருக்கும்.
வேலை ரீதியாக எத்தனை மனக்கஷ்டங்கள், சங்கடங்கள் அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் என பலவற்றையும் ஊழியர்கள் தொடர்ந்து சகித்துக்கொண்டுதான் அந்த பணியை நித்தமும் முடித்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் ஊழியர்களின் மனக் கஷ்டங்களை புரிந்து, உணர்ந்து செயல்படும் மூத்த அதிகாரிகளோ, முதலாளிகளோ இருந்துவிட்டால் எதுவுமே சாத்தியம் என்பதுதான் உலகின் அனைத்து தரப்பு மக்களின் குறைந்தபட்ச எதிர்ப்பார்ப்பாகவே இருக்கும்.
ஆனால் அந்த குறைந்தபட்ச எதிர்ப்பார்ப்பை பெற்றிருக்கும் வாய்ப்பு பெண் ஒருவருக்கு தனது முதலாளியால் கிடைத்திருக்கிறது என்றால் மிகையில்லை. ட்விட்டர் பயனரான Stuti என்ற பெண் தனது பாஸ் குறித்து பதிவிட்ட ட்வீட்தான் தற்போது இணையவாசிகளிடையே பெருமளவில் பேசப்பட்டு வருவதற்கு வழி வகுத்திருக்கிறது.
அதில், “இரண்டு முறை வந்த செல்ஃபோன் அழைப்புக்கு பிறகு, தன்னை தொடர்புகொள்ளுமாறு என்னுடைய பாஸ் மெசேஜ் அனுப்பியிருந்தார். அவருக்கு, “எனக்கு விரக்தியாக இருக்கிறது. யாரிடமும் பேச வேண்டும் என தோன்றவில்லை” என பதில் அனுப்பினேன். அதற்கு, “உங்களுடைய வேலைகளை என்னிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு 3 அல்லது 4 நாட்களுக்கு விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் மனநிலையை மோசமாக்க விடாதீர்கள்” என எனக்கு பதில் அனுப்பினார். இதுதான் ஒரு ஆரோக்கியமான பணி கலாசாரமாக இருக்கும் என நினைக்கிறேன்.” என பதிவிட்டிருந்தார்.
பொதுவாக பெண்ணுக்கு பெண்ணே எதிராக இருப்பார்கள் என்றெல்லாம் கருத்துகள் நிலவுவதுண்டு. ஆனால் ஸ்டுட்டியின் பெண் மேலதிகாரி இப்படியான அறிவுரையை கொடுத்தது நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது அவர்களின் கமெண்ட்ஸ்களின் மூலமே புரிந்துகொள்ள முடியும். இதுபோக பலரும் தங்கள் பணி இடங்களில் நடந்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார்கள்.