முதல் மக்களவையில் இருந்து 16ஆவது மக்களவை வரை எத்தனை பெண் எம்பிக்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்? இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பதை பார்க்கலாம்.
நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின், 1952ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் மக்களவைக்கு தேர்வான பெண் எம்பிக்களின் எண்ணிக்கை 24. அதில் மரகதம் சந்திரசேகர், அம்மு சுவாமிநாதன் ஆகிய இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 1957ஆம் ஆண்டு தேர்தலில் தேர்வான 24 பெண் மக்களவை உறுப்பினர்களில் பார்வதி கிருஷ்ணன் ஒருவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர். 1962ஆம் ஆண்டு தேர்தலில் 37 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மரகதம் சந்திரசேகர் மற்றும் டி.எஸ்.சவுந்தரம் ராமச்சந்திரன்.
1967ஆம் ஆண்டு தேர்தலில் 33 பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒருவரும் தமிழகத்தை சேர்ந்தவர் இல்லை. 1971ஆம் ஆண்டு 28 பெண்கள் தேர்வானார்கள், அவர்களில் பார்வதி கிருஷ்ணன், ஜெயலட்சுமி ஆகிய 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 1977ஆம் ஆண்டு தேர்வான 21 பெண் எம்பிக்களில் 2 எம்பிக்களை தமிழகம் பெற்றிருந்தது. பார்வதி கிருஷ்ணன், ஜெயலட்சுமி ஆகிய இருவரே மீண்டும் தேர்வாகினர். 1980 ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்வான 32 பெண் எம்பிக்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை. 1984ஆம் ஆண்டு தேர்தலில் 45 பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மரகதம் சந்திரசேகர், வைஜெயந்திமாலா பாலி ஆகிய இருவர் தமிழக எம்பிக்கள்.
1989ஆம் ஆண்டு 28 பெண் எம்பிக்கள் வெற்றி பெற்றனர். மரகதம் சந்திரசேகர், வைஜெயந்திமாலா பாலி ஆகியோரே மீண்டும் வென்றனர். 1991ஆம் ஆண்டு தேர்தலில் 42 பெண் எம்பிக்கள் தேர்வான நிலையில் மரகதம் சந்திரசேகர், பத்மா, கே.எஸ். சவுந்தரம் ஆகிய 3 பேர் தமிழக பிரதிநிதிகள். 1996இல் 41 பெண் எம்பிக்கள் வெற்றி பெற்றனர், இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை. 1998ல் நடந்த தேர்தலில் 44 பெண்கள் மக்களவைக்குத் தேர்வாகினர். இதில் சரோஜா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
1999 தேர்தலில் 52 பெண்கள் வெற்றி பெற, அதில் சரோஜா மீண்டும் வெற்றி பெற்றார். 2004ஆம் ஆண்டும் 52 பெண்கள் தேர்வான நிலையில் பவானி ராஜேந்திரன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ராணி, ராதிகா செல்வி ஆகிய நால்வர் தமிழக பிரதிநிதிகளாக மக்களவைக்குச் சென்றனர். 2009ஆம் ஆண்டு தேர்தலில் 64 பெண்கள் மக்களவைக்கு தேர்வாகினர். இதில் ஹெலன் டேவிட்சன் ஒருவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில்தான் அதிகபட்சமாக 66 பெண் உறுப்பினர்களை மக்களவை பெற்றது. இதில் மரகதம் குமரவேல், சத்யபாமா, வனரோஜா, வசந்தி ஆகிய 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
(மரகதம் குமரவேல்)
நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு 8 ஆயிரத்து 488 எம்பிக்கள் மக்கள் பிரதிநிதிகளாக மக்களவைக்கு சென்றுள்ளனர். இவர்களில் 633 பேர் மட்டுமே பெண்கள்.