மேட்ரிமோனி ப்ரோஃபைலை வைத்து அதிக சம்பளத்துக்கான வேலைக்கு விண்ணப்பித்த பெண்!
டேட்டிங் செயலிகளை எப்படி வீடு தேடுவதற்கும், வேலை தேடுவதற்கும் இணையவாசிகள் பயன்படுத்துகிறார்களோ அதேபோல மேட்ரிமோனி தளங்களையும் கையாள தொடங்கி இருக்கிறார்கள்.
பெற்றோர்களின் கட்டாயத்துக்காக மேட்ரிமோனி தளங்களில் விவரங்களை பதிந்துவிட்டு, பின் அதன் வழியாக வெவ்வேறு நபர்களை பார்த்து பேசி பழகுவது பலருக்கும் வாடிக்கையாக இருக்கும். அதே வேளையில் மேட்ரிமோனி மூலம் பழகுவோரிடம் மோசடியில் ஈடுபடுவோரும் உண்டு.
ஆனால் பெண் ஒருவர் மேட்ரிமோனி தளங்களில் பதிந்திருப்பவர்களின் திருமணத்துக்கான ப்ரோஃபைலை, தன்னுடைய தொழில் ரீதியான வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு பயன்படுத்தியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
இது தொடர்பாக அஷ்வீன் பன்சால் என்பவர் தனது லிங்க்ட் இன் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவுதான் இணையவாசிகளை அசர வைத்திருக்கிறது. அதில் அவர் அந்த மேட்ச் மேக்கிங் தளத்தை வைத்து எந்த நிறுவனத்தில் தனக்கு நல்ல சம்பளம் கொடுப்பார்கள் என ஒப்பிட்டு பார்த்திருக்கிறார்.
அதன்படி, “ஜீவன்ஷாதி என்ற தளத்தில் உள்ள ப்ரோஃபைல்களை வைத்து வெவ்வேறு நிறுவனங்களில் தனக்கு ஏற்ற சம்பளத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன் என என்னுடைய தோழி கூறினார்” என்று அஷ்வீன் பன்சால் பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவைக் கண்டு வாய்ப்பிளந்த நெட்டிசன்கள் பலரும், “இப்படியுமா நடக்கும்?” , “இது மாதிரிலாம் செய்ய முடியுமா?” என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். மேலும், “ஒரே கல்லுல ரெண்டு மாங்கா போல, அதிக சம்பளத்தில் இருக்கும் நபரை திருமணமும் செய்துகொண்டு நீங்களும் அதிகம் சம்பாதிக்க முடியும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.