ஆன்லைன் டெலிவரி பணிகளில் பல நேரங்களில் பல விதமான குளறுபடிகள் நடைபெறுவதும் அது சமூக வலைதளங்களில் வெளிப்படுவதும் உண்டு. அதனூடே சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் வெளிவருவதும் வாடிக்கையே.
அந்த வகையில், இந்தியாவின் பிரபல ஃபுட் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஸ்விக்கி, மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் இன்ஸ்டா மார்ட் என்ற சேவையை தனது செயலியில் வழங்கி வருகிறது. அதன்வழியே தற்போது சிந்தனைமிக்க செயல் ஒன்றை செய்திருக்கிறது ஸ்விக்கி நிர்வாகம்.
அதன்படி சமீரா என்ற பெண் ஸ்விக்கி இன்ஸ்டா மார்ட்டில் சானிட்டரி நாப்கினை ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அவருக்கு அந்த சானிட்டரி நாப்கினுடன் சில சாக்லேட்களும் சில குக்கீஸ்களும் இருந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த பெண், “மிகவும் சிந்தனைமிக்க செயல் இது. ஆனால் இதனை வைத்தது ஸ்விக்கியா அல்லது கடைக்காரர் என தெரியவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த ட்வீட் ட்விட்டரில் இணையவாசிகளிடையே நல்ல கவனத்தையும் பெற்றிருந்த நிலையில், “உங்களுடைய நாள் நன்றாக அமைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம் சமீரா” என ஸ்விக்கி கேர்ஸ் சார்பில் பதிலும் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, “யாராக இருந்தாலும் சரி. இது ஒரு நல்ல செயல்” என்றும், “இது அழகான மற்றும் சிந்தனைமிக்க ஒன்று” என்றும் நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.