கமுதி அருகே காளான் வளர்ப்பில் அசத்தி வரும் பெண், மாதம் 30 ஆயிரம் வருமானம் ஈட்டி அசத்தி வருகிறார்.
ராமநாதபுரம் என்றாலே வறட்சி மாவட்டம் என்ற பெயரை மாற்றும் அளவிற்கு இம்மாவட்டம் தற்போது பல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் அடைந்து வருகிறது. இதற்கு முன்னுதாரணமாக குளிர்ச்சியான பகுதிகளில் மட்டுமே சாத்தியமாகும் என கருதிய காளான் வளர்ப்பில் சாதித்துக் காட்டி வருகிறார் பெண் ஒருவர்.
கமுதி அருகே உள்ளது ராமசாமிபட்டி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி ஸ்ரீதேவி. இவர் கொரோனா ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் காளான் வளர்ப்பில் தனி கவனம் செலுத்தினார். இதற்காக மதுரை அத்திப்பட்டியில் உள்ள தனியார் காளான் வளர்ப்பு மையம், மற்றும் அருப்புகோட்டை அரசு அறிவியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பயிற்சி மேற்கொண்டார். பயிற்சியை முடித்த பின்பு தோட்டக்கலைத் துறை வாயிலாக மானியம் பெற்று தனது வீட்டின் அருகே சிப்பி காளான் வளர்ப்பை தொடங்கினார்.
தென்னை ஒலை மூலம் கொட்டகை அமைத்து, அதனுள் வெளிச்சம் புகாத வண்ணம் சணல் சாக்கு பைகளால் திரை அமைத்து, சிறிய வகை ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் தெளித்து கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர்ச்சியான சூழ்நிலையை உருவாக்கினார். பின்னர் பிளாஸ்டிக் பைகளில் வைக்கோல், காளான் விதைகள், மற்றும் அதன் வளர்ச்சிக்கு தேவையான மூலப்பொருட்களை அடைத்து அதனை தீவிரமாக கண்காணித்து வந்தார்.
தற்போது காளான் அறுவடை தயார் நிலைக்கு வந்துள்ளது. தினசரி 7 முதல் 8 கிலோ காளான் கிடைக்கிறது. இது வெளி சந்தையில் ஒருகிலோ 250 முதல் 300 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஸ்ரீதேவி கிராமத்து மக்களுக்காக 150 முதல் 200 வரை மட்டுமே விற்பனை செய்கிறார். மேலும் காளான் தேவைப்படும் பொதுமக்களுக்கு வீடுதேடி சென்று விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் நாளொன்றுக்கு குறந்தபட்சம் ரூ.1000 வருமானமாக ஈட்டி கொரோனா காலத்திலும் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறார்.