சிப்ஸ்க்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் காதலனை காரில் இருந்து இறக்கி விட முயன்ற பெண் மீது, தற்போது நீதிமன்ற தண்டனை பெற இருக்கிறார். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடந்திருக்கிறது.
சார்லோட் ஹாரிசன் என்ற பெண்ணுக்கும், மேத்யூ ஃபின் என்பவருக்கும் இடையே சிக்கன் சிப்ஸ்க்காக நடந்த வாக்குவாதத்தில் சார்லோட் தனது காரை காதலனை நோக்கி இயக்கி, விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இது கடந்த பிப்ரவரி 26ம் தேதி அடிலெய்டின் மெல்பெர்ன் தெருவில் அரங்கேறியிருக்கிறது.
இது குறித்து பேசியிருக்கும் சார்லோட்டும் மேத்யூவும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். அதில், “இது விபத்துதான். நான் காவல் நிலையத்துக்குதான் செல்ல முற்பட்டேன். ஆனால் தவறுதலாக பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதால் இப்படியாகிவிட்டது” என சார்லோட் கூறியிருக்கிறார்.
அதேவேளையில் ஆஸ்திரேலியாவின் 9news தளத்திடம் பேசிய மேத்யூ, “சார்லோட்டின் சிக்கன் சிப்ஸ் பேக்கில் இருந்து ஒரு சிப்ஸ் கேட்டேன். ஏனெனில் அவர் சாப்பிட்டுவிட்டார் என எண்ணினேன். ஆனால் நான் அதை கேட்டிருக்கவே கூடாது” எனக் கூறியிருக்கிறார்.
இந்த சிப்ஸ் கேட்ட விவகாரத்தில்தான் காரை விட்டு மேத்யூ ஃபின் இறங்கியிருக்கிறார். அவரை பின் தொடர்ந்து சென்ற போதே சார்லோட் கார் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதனால் மெல்பெர்ன் செயின்ட் பேகன் தெருவே பரபரப்புக்குள்ளாகியதாம். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சார்லோட்டை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியிருக்கிறார்கள்.
அங்கு தனது ஜாமின் மனுவில், “எனக்கு மேத்யூ ஃபின்னை காயப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் இல்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதனையடுத்து சார்லோட் ஹாரிசன் வீட்டுக்காவலில் இருக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார் மாஜிஸ்திரேட். இதனிடையே சார்லோட்டுக்கு ஆதரவாக நீதிமன்றத்துக்கு சென்ற மேத்யூ ஃபின், பாதி வழியிலேயே திரும்பி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சிப்ஸ்க்காக காதலர்கள் இடையான விவாதத்தில் சாலையோர கம்பத்தில் மோதி விபத்து ஏற்படுத்திய காதலியின் செயல் ஆஸ்திரேலேய ஊடகத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களிலும் அது தொடர்பான வீடியோ பரவிக் கொண்டிருக்கிறது.