புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுப்போம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் மருத்துவ வாய்ப்பை இழந்த மாணவி அனிதா தற்கொலையைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, மாணவி அனிதாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கூறினார். மேலும் அனிதாவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக திமுக முன்னாள் எம்எல்ஏ சிவசங்கர் மற்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் மீது குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் நீட் தேர்வு குறித்தும் மாணவி அனிதாவின் மரணம் தொடர்பாகவும் அனைத்துக்கட்சி கூட்டத்தை திமுக கூட்டியது. திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டன.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, பிரச்னையை திசை திருப்புகிற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை நிச்சயம் எடுப்போம்” என்று கூறினார்.
மேலும், “நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனிதாவின் உயிர்பலிக்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முதற்கட்டமாக, செப் 8 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துகிறோம். அந்தப் பொதுக்கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை அறிப்போம். அந்த அறிவிப்பு மத்திய, மாநில அரசுகள் விழிப்படையும் வகையில் இருக்கும். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமே மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்குதான்” என்றும் ஸ்டாலின் கூறினார்.