“டெல்லியிடம் சரணடைய மாட்டோம்” - டிசம்பர் தேர்தலை வைத்து சந்திரசேகர் ஐடியா

“டெல்லியிடம் சரணடைய மாட்டோம்” - டிசம்பர் தேர்தலை வைத்து சந்திரசேகர் ஐடியா
“டெல்லியிடம் சரணடைய மாட்டோம்” - டிசம்பர் தேர்தலை வைத்து சந்திரசேகர் ஐடியா
Published on

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அணிகள் சேர்க்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர். அதில், பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய அணியை உருவாக்கும் முயற்சியில் மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால், பாஜகவுக்கு எதிரான அணியை திரட்டுவதில் காங்கிரஸ் கட்சியையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதில் மம்தா எண்ணம் கொண்டுள்ளது போல் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

மம்தாவின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பவர் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ். ஆனால், அவர் வைக்கும் முக்கியமான நிபந்தனை காங்கிரஸ், பாஜக இல்லாத மூன்றாவது அணி வேண்டும் என்பதுதான். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலை முன் கூட்டியே நடத்த சந்திர சேகர் ராவ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறார். 

இந்நிலையில், ஐதராபாத் அருகே ‘பிரகதி நிவேதனா சபா’ என்ற பெயரில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், முன்கூட்டிய தேர்தல் நடத்துவது குறித்து சந்திர சேகர் ராவ் எதுவும் தெளிவாக பேசவில்லை. 

ஆனால், டெல்லியிடம் சரணடைய மாட்டோம், மீண்டும் ஆட்சியை தக்கவைப்போம் என்று சந்திர சேகர் ராவ் பேசியுள்ளார். இவர் பேசுகையில், “தமிழகத்தில் அவர்களுடைய தலைவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தை தாங்களாகவே ஆட்சி செய்கிறார்கள். அதேபோல், நாமும் ஆட்சியை தக்கவைத்து கொள்வோம். டெல்லி தலைமையிடம் சரணடைய மாட்டோம். 

எனது அரசை நான் களைக்க உள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க அனைத்து டிஆர்எஸ் உறுப்பினர்களும் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். முடிவு எடுக்கும் போது நான் எல்லோருடனும் அறிவிப்பேன்.  சட்டசபை தேர்தல் குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை”என்று கூறினார்.

மேலும் காங்கிரசை சாடிப் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் நிற்பதற்கு சில முறையாவது டெல்லி தலைமையை சென்று பார்க்க வேண்டியுள்ளது. அதனால், டெல்லிக்கு அடிமைப்பட்டு கிடக்கும் அரசு வேண்டுமா? அல்லது தெலுங்கானவுக்காக போராடியவகள் தலைவர்களாக ஆக வேண்டுமா?. தெலுங்கானா மாநிலம் யார் ஒருவர் முன்னும் மண்டியிட்டு நிற்காத நிலையை மக்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.  

காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக பேசி வந்தாலும், சந்திர சேகர் ராவின் செயல்கள் பாஜகவுக்கு சாதகமாகவே முடியும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பொதுக் கூட்ட பேச்சும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே இருந்துள்ளது. பிரதமர் மோடியை கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மூன்று முறை சந்திர சேகர் ராவ் சந்தித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி உடன் அவர் நெருக்கம் காட்டுவது போலவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 

இந்த நேரத்தில், தெலுங்கானா தேர்தலை முன் கூட்டியே நடத்துவது தொடர்பாக சந்திர சேகர் ராவ் ஆலோசனை செய்வது குறித்து அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. அப்படி, தேர்தலை முன் கூட்டியே நடத்துவது குறித்து அவர் எடுக்கும் முடிவு யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com