பாஜக அமைச்சரவையில் நிச்சயம் இடம்பெறமாட்டோம் - நிதிஷ் குமார் கட்சி உறுதி

பாஜக அமைச்சரவையில் நிச்சயம் இடம்பெறமாட்டோம் - நிதிஷ் குமார் கட்சி உறுதி
பாஜக அமைச்சரவையில் நிச்சயம் இடம்பெறமாட்டோம் - நிதிஷ் குமார் கட்சி உறுதி
Published on

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சரவையில் நிச்சயம் இடம்பெறமாட்டோம் என்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது. 

மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து பாஜக போட்டியிட்டது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 17 இடங்களிலும், நிதிஷ் கட்சி 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. அவர்கள் கூட்டணியில் இடம்பெற்ற லோக் ஜன சக்தி கட்சி 6 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வென்றது. 

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக பிரதமர் மோடி உள்ளிட்ட 58 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதில், பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தன. ஆனால், பீகாரில் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி அமைச்சரவை பட்டியலில் இடம்பெறவில்லை.

பாஜக ஒரே ஒரு அமைச்சர் பதவி மட்டும் வழங்க ஒத்துக் கொண்டதாகவும், குறைந்தபட்சம் இரண்டு இடமாவது வேண்டும் என நிதிஷ் கட்சி தரப்பில் வலியுறுத்தபட்டதாகவும் கூறப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படாததால் அமைச்சரவை பட்டியலில் நிதிஷ் கட்சி இடம்பெறவில்லை. தங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், பாஜக கூட்டணியின் அமைச்சரவையில் நிச்சயம் இடம்பெறமாட்டோம் என்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது. இதுவே இறுதி முடிவு என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறுகையில், “பாஜக தரப்பில் எங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு ஒரு இடம் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அதனால், வருங்காலத்திலும் பாஜக கூட்டணி அமைச்சரவையில் நாங்கள் இடம்பெறமாட்டோம். இது எங்களது இறுதி முடிவு” என்று கூறியுள்ளார்.

இதுஒருபுறம் இருக்க, பீகாரில் ஆட்சியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் அரசு தன்னுடைய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அனைவரும் நிதிஷ் கட்சியைச் சேர்ந்தவர்கள். பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com