குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம் உருவாகியுள்ளதை அடுத்து, காட்டுப்பன்றி ஒன்று வெள்ளத்தில் சிக்கி, இறந்த நிலையில் ஐந்தருவி கரையோரம் ஒதுங்கியுள்ளது.
தென்காசி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி வருகிறது. மலையின் உட்பகுதியில் விடாது மழை பெய்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் இன்று காலை குற்றாலம் ஐந்தருவியில் காட்டுப்பன்றி ஒன்று இறந்த நிலையில் விழுந்து கிடந்தது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, வனத்துறையினர் காட்டுப்பன்றியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பிணமான நிலையில் காட்டுப்பன்றி அடித்து வரப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.