தன்னை மிரட்டுவதாக பொதுமேடையில் அஜித் பேசியது போல் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கமலுக்கு பேச தைரியம் இல்லாமல் போனது ஏன் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஊழல் அதிகமாகிவிட்டது என்பது போன்று அரசுக்கு எதிரான பல கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இது போன்ற கருத்துக்களை கமல்ஹாசன் ஏன் தெரிவிக்கவில்லை. திமுக ஆட்சியில் முதலமைச்சர் விழாவில் நடிகர்கள் மிரட்டப்படுவதாக அஜித் பேசியபோது கமல் எங்கு சென்றார்? அஜித் பொதுமேடையில் தைரியமாக பேசியதுபோல் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கமலுக்கு பேச தைரியம் இல்லாமல் போனது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதிமுக அரசை விமர்சிக்கும் அருகதை கமலுக்கு இல்லை என்றும் கடுமையாகச் சாடியுள்ளார். ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் அதற்கு உரிய முறையில் அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.