2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த 10ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனால் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு ஆகிய வேலைகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் செலவுகள் குறித்து ஒரு ஆய்வு வெளிவந்துள்ளது.‘சென்டர் ஃபார் மீடியா ஸ்டெடீஸ்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் வரும் 2019 தேர்தலுக்கு 7 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 4,87,86,50,00,000.00) செலவாகும் என்று கணித்துள்ளது. இது கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலுக்கு செலவான 6.5 பில்லியன் டாலரை விட அதிகமானது என்று தெரிவித்துள்ளது. மேலும் 2019 தேர்தலின் செலவு 2014 நாடாளுமன்றத் தேர்தலின் செலவைவிட 40% அதிகமானது என்கிறது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 5 பில்லியன் டாலர் செலவானது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த ஆய்வில் சமூக வலைத்தளங்களில் செய்யப்படும் செலவுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூக வலைத்தளங்களில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 50 பில்லியன் டாலர் செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமூக வலைத்தளங்களில் 2.5 பில்லியன் டாலர் செலவிடப்பட்டது. மேலும் ‘ஸேனித் இந்தியா’ நடத்திய ஆய்வில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் விளம்பரங்களுக்கு 26 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் எனக் கூறியுள்ளது. இது கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் விளம்பரங்களுக்கு செலவிட்ட (12 பில்லியன் ரூபாய்) தொகையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்டுள்ள ஆய்வுகளை வைத்து பார்க்கும் போது வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்தான் உலக அளவில் நடைபெறும் தேர்தலில் அதிக செலவுடன் நடைபெறவிருக்கும் தேர்தல் எனத் தெரியவந்துள்ளது.