திருப்பத்தூர் தொகுதி யாருக்கு திருப்பம் தரப்போகிறது?- ஓர் அலசல்

திருப்பத்தூர் தொகுதி யாருக்கு திருப்பம் தரப்போகிறது?- ஓர் அலசல்
திருப்பத்தூர் தொகுதி யாருக்கு திருப்பம் தரப்போகிறது?- ஓர் அலசல்
Published on

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியை பொருத்தவரை 2006 மீண்டும் திரும்புகிறது என்றே சொல்லலாம். 2006-ல் களத்தில் இருந்த 3 பிரதான வேட்பாளர்கள், 2021 தேர்தல் களத்திலும் மீண்டும் மோதுகிறார்கள்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இதுவரையிலான 13 தேர்தல்களில், திமுக 7 முறையும், அதிமுக 3 முறையும், சுயேச்சை, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலா ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன.

இத்தொகுதியில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பில் பெரிய கருப்பன், அதிமுக சார்பில் மருது அழகுராஜ், அமமுக சார்பில் கே.கே.உமாதேவன், நாம் தமிழர்கட்சி சார்பில் கோட்டை குமார், ஐஜேகே சார்பில் அமலன் சவரிமுத்து ஆகியோர் களத்தில் உள்ளனர்.

திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரான பெரிய கருப்பன், 2006 முதல் இத்தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார். இப்போது 4 ஆவது முறையாக மீண்டும் களம்காண்கிறார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் 3-ஆவது முறையாக போட்டியிட்ட பெரியகருப்பன், ஒருலட்சத்து 10 ஆயிரத்து 719 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் அசோகனை 42 ஆயிரத்து 004 வாக்குகள் வித்தியாசத்தில் பெரியகருப்பன் தோற்கடித்தார்.

தேமுதிக, சமகவில் இருந்தவரான மருது அழகுராஜ், பின்னர் அதிமுகவில் இணைந்தார். நமது அம்மா நாளிதழ் ஆசிரியர், அதிமுக செய்தித்தொடர்பாளராக உள்ள இவர், 2006-ல் தேமுதிக வேட்பாளராக களம் இறங்கி திமுக வேட்பாளர் பெரியகருப்பனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.

அமமுக சார்பில், கே.கே.உமாதேவன் களம் காண்கிறார். 2001ல் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்தமுறை அமமுக சார்பில் இவர் போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள ஐஜேகே சார்பில் போட்டியிடும் அமலன் சவரிமுத்து, 20 ஆண்டுகளாக ராணுவத்தில் சேவையாற்றியவர். பனிச்சரிவு விபத்தில் கால் பாதித்ததில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று ஊர்திரும்பியவர் விவசாயியாக வாழ்ந்து வருகிறார். 10 ஆண்டுகளாக ஐஜேகேவில் உள்ள அமலன் சவரிமுத்து, அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருக்கிறார். காரைக்குடியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரான அமலன், இந்த சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டுள்ளார்.

நாம் தமிழர்கட்சியைச் சேர்ந்த கோட்டை குமார், திரைப்படத் தயாரிப்பாளராகவும், வழக்கறிஞர்களாகவும் உள்ளவர். கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் கோட்டைகுமார், முதன்முறையாக சட்டமன்றத் தேர்தல் களம் காண்கிறார்.

இந்ததொகுதியை பொருத்தவரை 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டவர்களான பெரியகருப்பன், மருது அழகுராஜ், உமாதேவன் ஆகியோரே 2021 தேர்தலில் மீண்டும் மோதுகிறார்கள். ஆனால் அந்தத் தேர்தலில் மருது அழகுராஜ் தேமுதிக சார்பிலும், உமாதேவன், அதிமுக சார்பிலும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மருது அழகுராஜ் அதிமுக சார்பிலும், உமாதேவன் அமமுக சார்பிலும் போட்டியிடுகிறார்கள். களம் யாருக்கு சாதகமாக இருக்கப்போகிறது? யாருக்கு திருப்பத்தை தரப்போகிறது என்பது வாக்காளர்களின் கைகளிலேயே இருக்கிறது.

<iframe width="427" height="240" src="https://www.youtube.com/embed/NjMr8148xUA" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com