திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது சேலம் மாவட்டம் எடப்பாடித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் என்பவரை வேட்பாளராக அறிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில், 'முதல்வரை எதிர்த்து சாதாரண வேட்பாளரை நிறுத்தியுள்ளீர்களே?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “அவர் சாதாரண வேட்பாளர் என்று யார் சொன்னது? அவர் சாதாரணமான வேட்பாளராக இருக்கலாம். ஆனால், வெற்றி வேட்பாளர்” என்றார் ஸ்டாலின்.
2003ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த சம்பத்குமார், இளைஞரணி பொறுப்பாளராக பணியாற்றினார். பின்னர் படிப்படியாக வளர்ந்து தற்போது சேலம் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளராக உள்ளார். எம்.பி.ஏ பட்டதாரியான இவர் விவசாய பிண்ணனியை கொண்டவர். இவர் குடும்பத்தில் அரசியலில் யாரும் இறங்கியதில்லை. சம்பத்குமார் திமுக நடத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார் என்று திமுக தரப்பில் சொல்லப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் திமுக சார்பில் வழங்கப்பட்ட நல உதவிகள் அனைத்தையும் மக்களுக்கு கொண்டுசென்ற பொறுப்பான ஓர் இளைஞராக திகழ்ந்ததால், இளைஞர்களை ஊக்குவிக்கும்விதமாக சம்பத்குமாருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து சம்பத்குமார் கூறுகையில், ‘’முதல்வர் எங்கு சென்றாலும் எடப்பாடி தொகுதியில் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்திருப்பதாக கூறுகிறார். ஆனால் தனது சொந்த தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு எந்த நலத்திட்டத்தையும் அவர் செய்துகொடுக்கவில்லை. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். எனவே வெற்றிவாய்ப்பு எனக்கு உறுதி’’ என்று நம்பிக்கையோடு தெரிவித்திருக்கிறார்.