சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும்போது அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் என நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.
தென்மாவட்டங்களில் இரு பிரிவினரிடைய மோதல் ஏற்படும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்.எல்.ஏவுமான நடிகர் கருணாஸ் தென்மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “விளம்பர நோக்கத்தில் இரு தரப்பினரிடையே பிரச்னைகளை உருவாக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீதும், அச்சகங்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வரும் தேர்தலில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முக்குலத்தோர் புலிப்படை உதவியாக இருக்கும், வரும் தேர்தலில் கூட்டணி அமைக்கும் கட்சியிடம் இரண்டு தொகுதிகள் கேட்கப்படும் . அதிமுகவில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக பல தரப்பு கருத்துகள் பிரதிபலிக்கப்படுகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும்போது அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும். அதிமுகவில் சசிகலா இடம்பெறுவது குறித்து கருத்து சொல்ல இயலாது,
வேளாண்மையை அழிக்கும் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாவிற்கு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவிக்கிறோம். காவிரி -குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். ரஜினி ஆன்மிக அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த கருணாஸ் ரஜினி ரசிகர்கள் பிறந்ததில் இருந்து போஸ்டர் ஒட்டிவருகிறார்கள். அவர் அரசியலுக்கு வந்தால் தான் சொல்லமுடியும், தமிழகத்தில் மட்டும் தான் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் கொடிபிடிக்க ஒரு கூட்டம் உள்ளது” என்றார்.