பூத் சிலிப் இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அப்படி என்றால் ஏன் பூத் சிலிப், அதன் வரலாறு, அதை எவ்வாறு பெறலாம் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
electoralsearch.in இணையத்தில் பூத் சிலிப் பெறலாம், பூத் சிலிப் வரலாறே சுவாரசியமானது. தொடக்கக்காலத்தில், வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, வாக்காளர்களை கண்டுபிடிப்பதற்காக அரசியல் கட்சியினர் கண்டுபிடித்த யுக்திதான் பூத் சிலிப். வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் விவரங்களை தங்களது கட்சி சின்னம் அச்சடிக்கப்பட்ட படிவத்தில், எழுதி வீடுவீடாக அரசியல் கட்சியினர் வழங்கினர். அந்த சிலிப்பில் வாக்காளரின் பெயர், பாலினம், பாகம் எண், வாக்காளர் பட்டியல் வரிசை எண், எந்த மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற விவரங்கள் எழுதப்பட்டிருக்கும்.
1980-களில் பிறந்த பலருக்கு இந்த பூத் சிலிப்களை எழுதிக் கொடுத்து, ஒரு ரூபாய் வரை பணம் பெற்றது ஞாபகம் வரலாம். பூத் சிலிப் மூலம், ஒரு வாக்காளர் விவரங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எளிதில் அடையாளம் கண்டு, விரைவில் வாக்களிக்க அனுமதித்து வந்தனர். சில தேர்தல்களுக்கு முன்பு வரை அமலில் இருந்த இந்த நடைமுறையை , தேர்தல் ஆணையமே கையில் எடுத்துக் கொண்டது. அரசியல் கட்சிகள் பூத் சிலிப்பை விநியோகிப்பதற்கு தடைவிதித்த ஆணையம், அதிகாரிகள் மூலம் தாங்களாகவே நேரடியாக வழங்கினர்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது, வாக்காளர் புகைப்படத்துடன் ஏ4 அளவு தாளில் அச்சிடப்பட்ட பூத் சிலிப் விநியோகிக்கப்பட்டது. பலருக்கு பூத் சிலிப் கிடைக்காத நிலையில், அது இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
பூத் சிலிப் கிடைக்காதவர்கள், அதை ஆன் லைன் மூலம் பெறும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. electoralsearch.in என்ற இணையதளத்தில், வாக்காளர் பெயர், வயது, தொகுதி உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து, பூத் சிலிப்பை பெறலாம். மொபைல் போன்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்வதற்கு தடை உள்ளதால், பூத் சிலிப்பை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். அல்லது அதில் உள்ள பாகம் எண் மற்றும் வரிசை எண்களை குறித்துக் கொண்டு சென்றால் எளிதில் வாக்களிக்கலாம்.