நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் பலம் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் மேற்குவங்கத்தில் பாஜக மற்றும் ஆளும் திரிணாமுல் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவியது. சில இடங்களில் இரு கட்சியினரிடையே மோதல் கூட நிகழ்ந்தது. பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடியும், மம்தா பானர்ஜியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளில் மேற்குவங்கத்திலுள்ள 42 தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. கடந்த தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்த பாஜக இந்த முறை கூடுதலாக 16 இடங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் திரிணாமுல் கட்சிக்கு இணையாக வாக்கு சதவீதத்தையும் பெற்றுள்ளது. தன்வசம் இருந்த 12 இடங்களை திரிணாமுல் இழந்துள்ளது.
இந்நிலையில், நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறேன். பதவியேற்பு விழா என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு என்பதால் கலந்து கொள்கிறேன். மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது பற்றி பிற மாநில முதல்வர்களுடனும் பேசியுள்ளேன்” என்று தெரிவித்தார்.