மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரையின்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கீழே தள்ளிவிடப்பட்டதாகக்கூறி காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா, நந்திகிராம் தொகுதியிலிருந்து போட்டியிட உள்ளார். அதற்காக வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இது பாஜகவின் சதி என குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கிறது என்பதை பார்ப்போம்.
“மம்தா தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி யாருமே இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. தொகுதி மக்கள் மீதே குற்றம் சாட்டிய காரணத்தினால் மம்தா மீது நந்திகிராம் தொகுதி மக்கள் கொதிப்படைந்து போயுள்ளனர். எங்கே தேர்தலில் தோற்றுவிடுமோ? என்ற அச்ச உணர்வின் வெளிப்பாடு இது” என மேற்கு வங்க மாநில பாஜக ட்வீட் செய்துள்ளது.
“மம்தாவின் கான்வாயை தாக்கியது தலிபான் படையினாரா? பெரிய போலீஸ் படையே அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. அவரை யார் நெருங்க முடியும். மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்த இந்த நாடகத்தை ஆடியுள்ளார் அவர்” என்கிறார் மேற்கு வங்க மாநில பாஜக துணைத்தலைவர் அர்ஜூன் சிங்.
தேர்தல் ஆணையம் போலீஸ் டிஜிபியை மாற்றிய மறு தினமே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. z பிளஸ் பாதுகாப்பில் உள்ள மம்தா தாக்கப்பட்டது எவ்வாறு என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யவும் போலீசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
“அரசியலில் வன்முறைக்கு இடமே இல்லை” என மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
“இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தலைவர்களுக்கு அறவே பாதுகாப்பு இல்லை. தேர்தல் நேரங்களில் இதுமாதிரியான தாக்குதல் அதிகரிப்பதை பார்க்க முடிகிறது” என மற்றொரு காங்கிரஸ் கட்சி தலைவர் மிலிந் தியோரா தெரிவித்துள்ளார்.
“இதெல்லாம் அரசியல் பாசாங்கு. வேறொன்றும் இதில் சொல்வதற்கு இல்லை. நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என்பதால் இது மாதிரியான நாடகங்களை அவர் அரங்கேற்றியுள்ளார். அவர் வெறும் மம்தா அல்ல. முதல்வர், உள்துறை அமைச்சரும் கூட. அவர் தாக்கப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரே ஒரு காவலர் கூட சம்பவம் நடந்த இடத்தில் இல்லை என்பதை நம்ப முடிகிறதா?” என்கிறார் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி. அதே நேரத்தில் மம்தா விரைவில் குணமடைய வேண்டியும் ட்வீட் செய்துள்ளார் அவர்.