மேற்கு வங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலின் போது ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் பலியானார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முர்ஷிதாபாத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. இவர்கள் முர்ஷிதாபாத் தொகுதியிலுள்ள பக்வாங்கோலா வாக்குச்சவாடியில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குச்சவாடியிலிருந்து 300 மீட்டர் தொலைவில் காங்கிரஸ் கட்சியனர் மற்றும் திரிணாமுல் கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் டியாரூல் ஷேக் என்ற காங்கிரஸ் தொண்டர் ஒருவர் இறந்துள்ளார். அத்துடன் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தொண்டர் மெஹபூப் ஷேக் மற்றும் திரணாமுல் கட்சியின் தஹிஜூல் ஷேக் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே முர்ஷிதாபாத் தொகுதியின் ராணி நகர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது. அதில் சிலர் தங்களது முகத்தை மூடிக்கொண்டு நாட்டு வெடி குண்டுகளை வீசுவது போல் காட்சிகள் அமைந்துள்ளன.
முர்ஷிதாபாத் நடைபெற்ற கலவரங்கள் குறித்து அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அபு ஹெனா கூறியது “இன்று தேர்தலின் போது நடைபெற்ற வன்முறையில் எங்கள் கட்சியின் தொண்டர் ஒருவர் இறந்துள்ளார். ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களை பயமுறுத்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அத்துடன் அவர்கள் வாக்குச்சாவடியை கைப்பற்ற போகும் போது எங்கள் கட்சியனர் தடுத்தாதால் அவர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.