தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக கூட்டணி முழுமையான வெற்றிபெறும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் சிதம்பரத்தில் வாக்கு சேகரித்த அவர், புதிய தலைமுறைக்கு தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அதில் பேசிய அவர் ''கடந்த 22ஆம் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தொடங்கினேன். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து வருகிறேன். பரப்புரைக்கு செல்கின்ற இடங்களிலெல்லாம் மக்கள் எழுச்சியை பார்க்க முடிகிறது. 40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முழுமையான வெற்றி பெறும். 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுக முழுமையான வெற்றிபெற்று சாதனை படைக்கும். மக்களின் எதிர்பார்ப்பை அரசு பூர்த்தி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஏழைகளுக்கு ரூ.1500 உதவித் தொகை வழங்கும் திட்டம், மக்களின் எதிர்பார்ப்பை அறிந்து அறிவித்தோம் என்றும் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வதற்காகவே தமிழக அரசு கடன் வாங்குகிறது, கடனை வருவாய் மூலம் அடைத்து வருகிறோம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.