பனைமர தொழிலாளர்கள் மீது தொடர்ந்து போலீசார் பொய் வழக்கு போடுவதால், அதைக் கண்டித்து நரசிங்கனூர் பனைத் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நரசிங்கனூர், பூரிகுடிசை பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பனைமர தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கோடை காலங்களில் பனை மரங்களிலிருந்து பதநீர் இறக்கி பனை வெல்லம் தயாரிப்பது இவர்களுடைய தொழில்.
இந்நிலையில், பதநீர் இறக்கும் தொழிலாளர்களை காவல் துறையினர் கைது செய்து சாராய வழக்கு போடுவதாக இவர்கள் கூறுகிறார்கள். இதையடுத்து நேற்று 5 பேரை கைது செய்து அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக, அந்த நடவடிக்கையைக் கண்டித்து, வருகின்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.