தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, பெரும்பான்மையை இல்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,
"பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், 115 பேர் தான் இருக்கிறார்கள். ஈபிஎஸ், ஓ.பி.எஸ். அணிகளில் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை சேர்த்தே, 115 பேர் இருக்கிறார்கள். பெரும்பான்மைக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் குறைவு. இதனால் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, பெரும்பான்மையே இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "அதிமுக அணிகள் இணைவதில் கொஞ்சம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எங்களுக்கு பணத்தாசை கிடையாது, ஒற்றுமையாக மட்டுமே கூவத்தூரில் தங்கியிருந்தோம். 6 மாத அரசியல் சூழ்நிலை காரணமாக சின்னம்மா என்று அழைக்கப்பட்டவர் இப்போது சசிகலா என்று பெயர் கூறி அழைக்கும் நிலைக்கு ஆளாகி விட்டார். அதிமுகவின் ஏணி என்பது ஜெயலலிதா மட்டும்தான்" என்றும் சீனிவாசன் கூறினார்.
டிடிவி தினகரன் நேற்று நடத்திய மேலூர் பொதுக்கூட்டத்தில் ஏராளமான எம்எல்ஏக்கள் பங்கேற்ற நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.