அயோத்தி ராமஜென்ம பூமி பிரச்னையை 24 மணி நேரத்தில் தங்களால் முடிக்க முடியும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு, ஜனவரி 29ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி யுயு லலித் சமீபத்தில் விலகினார். அயோத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டி ருந்த கல்யாண் சிங்குக்கு ஆதரவாக, 1997 ஆம் ஆண்டு யுயு லலித் வழக்கறிஞராக செயல்பட்டார். அதை சுட்டிக்காட்டியதை அடுத்து, இந்த அமர்வில் இருந்து அவர் தன்னை விடுவித்துள்ளார்.
இந்நிலையில், 5 பேர் கொண்ட புதிய அமர்வை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார். இந்த அமர்வில், தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகள் எஸ்.போப்தே, டி.ஒய்.சந்திரசத், அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.நஸீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.நஸீர் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இருந்த என்.வி.ராமன் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தாலும், உடனே அவசர சட்டம் கொண்டு வந்து ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா., விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்டவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்காக கூட்டணியையே முறிக்கும் அளவிற்கு சிவசேனா சென்றுவிட்டது.
இந்நிலையில், ‘உச்ச நீதிமன்றத்தால் இந்த பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்றால், அதனை எங்களில் ஒப்படைக்கட்டும். நாங்கள் அதனை 24 மணி நேரத்தில் முடிக்கிறோம். ராமர் கோவில் விவகாரத்தில் மக்கள் தங்களது பொறுமையை இழந்து வருகிறார்கள்” என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இதனிடையே, நீங்கள் எப்படி அயோத்தி பிரச்னையை தீர்ப்பீர்கள், பேச்சுவார்த்தை மூலமா? அதிகாரத்தின் மூலமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு யோகி ஆதித்யநாத் சிரித்துக் கொண்டே, ‘முதலில் நீதிமன்றம் இந்த விவகாரத்தை எங்களிடம் ஒப்படைக்கட்டும்’ என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த நிலப் பிரச்னை தேவையற்றது. அயோத்தி பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் சார்பில் அதனை முன் கூட்டியே முடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அது மக்களின் நம்பிக்கையின் அடையாக இருக்கும். ஒருவேளை இதில் தாமதம் ஏற்பட்டால் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும்” என்றார்.