ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக வாக்குப்பதிவுக்கு முன்பே இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது. இதனையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக ராஜேஷ் லக்கானி நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். லக்கானி தனது பதில் மனுவில், “இந்த விவகாரத்தில் மாநில காவல்துறை தான் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய பொறுப்பு மாநகர காவல்துறை ஆணையருக்கு தான் உண்டு. காவல்துறையின் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது. தேவையானபோது தலையிட்டு சில அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.