சபாநாயகர் தனபால் அளித்துள்ள நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக எம்.எல்.ஏக்கள் ரத்தின சபாபதி, பிரபு தெரிவித்துள்ளனர்.
அதிமுவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு அமமுகவில் பொறுப்பில் உள்ளதாக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து, தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு 3 எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த எம்எல்ஏ ரத்தினசபாபதி, “சபாநாயகரின் நோட்டீஸ் கிடைத்தவுடன் முறையாக விளக்கம் கொடுப்போம்; தினகரனுடன் இருக்கும் புகைப்படத்தில் எல்லோருமே இருக்கிறார்கள், அவர்கள் மீது என்ன நடவடிக்கை?” என்று கூறியுள்ளார்.
அதேபோல், கட்சிக்கு எதிராக வாக்களித்த 11 பேரை ஏன் இன்னும் தகுதி நீக்கம் செய்யவில்லை என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு கேள்வி எழுப்பியுள்ளார். புதிய தலைமுறைக்கு எம்.எல்.ஏ பிரபு அளித்த பேட்டியில், “சபாநாயகரின் நோட்டீஸ்க்கு விளக்கம் தர நான் தயாராக உள்ளேன். நானும் ஆதரவாக வாக்களித்ததால் தான் எடப்பாடி பழனிசாமி தற்போது முதல்வராக இருக்கிறார். அதிமுகவுக்கு எதிராக நான் செயல்படவில்லை; எடப்பாடி பழனிசாமி முதல்வராக நான் வாக்களித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
3 எம்.எல்.ஏக்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சபாநாயகர் பரிசீலனை செய்வார் எனத் தெரிகிறது.