ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்காமல் தடயங்கள் அழிக்கப்படுவதற்காக ஓபிஎஸ் ஈபிஎஸ் அணியினர் மௌனம் காத்தனர் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது கண்துடைப்பு நாடகம். சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்தது ஏன்? ஜெயலலிதா மரணம் குறித்து உண்மையான விசாரணை நடக்க முதல்வர், அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். ஊழல் அணிகள் சங்கமம் ஆக அரங்கேற்றப்பட்டுள்ள கந்துடைப்பு நாடகம்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியபோது ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மவுனம் காத்தார்கள். சட்டப்பேரவையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கமிஷன் அமைக்க கோரிக்கை வைத்த போது முதல்வரும் அமைச்சர்களும் தட்டிக்கழித்தனர். இருவரும் தடயங்களை அழிப்பதற்காகவே அமைதி காத்தனர். முதல்வருக்கு உண்மையான அக்கறை இருந்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.