தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களிக்க போதிய கால அவகாசம் வழங்கவேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவரும் தேர்தல் அலுவலகம், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவரான மாயவன் என்பவர், சொந்த தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படாவதவர்கள் வேறு தொகுதிக்கு செல்லும்போது அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுவதாகவும் அல்லது போதிய அவகாசம் கொடுக்கப்படுவதில்லை எனவும் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதனால் 2019ஆம் ஆண்டு தேர்தலில் கிட்டத்தட்ட 62 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக அதிக வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட உள்ளதால் அதிக ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட வாய்ப்புள்ளதாகவும், வேறு இடங்களுக்குச் செல்பவர்களுக்கு வாக்குரிமையை உறுதிப்படுத்தவேண்டும் என்றும், எனவே தேர்தலுக்கு முதல்நாள் அதே வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதி அளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கத்தில், மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்க முடியாது எனவும், தபால் வாக்குகள் மட்டுமே அனுமதிக்கப்பட முடியும் என்றும் கூறியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குடிமகனின் அடிப்படை உரிமை பாதிக்கப்படக்கூடாது எனவும், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களிக்க போதிய கால அவகாசம் வழங்கவேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.