சாலைவசதி இல்லாத பகுதிகளுக்க கழுதை குதிரைகள் மூலம் கொண்டு செல்லபட்ட வாக்குப்பதிவு இயந்திரம்

சாலைவசதி இல்லாத பகுதிகளுக்க கழுதை குதிரைகள் மூலம் கொண்டு செல்லபட்ட வாக்குப்பதிவு இயந்திரம்
சாலைவசதி இல்லாத பகுதிகளுக்க கழுதை குதிரைகள் மூலம் கொண்டு செல்லபட்ட வாக்குப்பதிவு இயந்திரம்
Published on

பதினாறாவது சட்டப்பேரவைத் தேர்தலை தமிழகம் எதிர்கொண்டுள்ள நிலையில், சாலைவசதியற்ற கிராமங்களுக்கு குதிரைகள், கழுதைகள் மூலமும், தலைச்சுமையாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

வாக்குப்பதிவு நாளுக்கான ஏற்பாடுகள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போதமலை பகுதியில் மேலூர், கீழூர் மற்றும் கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்து 224 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலைவசதியே காணாத இந்த கிராமங்களில் உள்ள 2 வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் தலைச்சுமையாக சுமந்தபடி கொண்டு சென்றனர்.

தேனி மாவட்டத்தில் போடி தொகுதிக்கு உட்பட்ட குரங்கணி, முதுவாக்குடி, முட்டம், காரிப்பட்டி, சென்ட்ரல் ஸ்டேஷன், உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு 3 குதிரைகள் மூலம், பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட 3 தொகுதிகளில், 868 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குன்னூர் தொகுதிக்குட்பட்ட தெங்குமரஹடா கிராமத்திற்கு, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வழியாக ஆற்றை கடந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வெள்ளக்கெவி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர், பெரியூர் மற்றும் கடப்பாரை குழி கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. சின்னூர், பெரியூர் மற்றும் கடப்பாரை குழி கிராமங்களையும் சேர்த்து 600 வாக்குகள் உள்ளன. இந்த நான்கு கிராமங்களுக்கும், குதிரைகளிலேயே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

இதேபோல, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மலையூர், கரந்தமலை உச்சியில் உள்ள பெரியமலையூர், சின்னமலையூர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு தலைச்சுமையாகவும், குதிரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

தருமபுரி மாவட்டம் வட்டுவன ஹள்ளி ஊராட்சியில் கோட்டூர்மலை, ஏரிமலை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு கழுதைகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. வாக்குப்பெட்டிகளில் வாக்களித்த காலமே முடிந்துவிட்ட நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தாலும், சாலைவசதி என்னவோ இதுவரை காணப்படவே இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com