விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவரின் சர்ச்சை ட்வீட்டுக்கு, ஓலா ட்விட்டரில் பதிலடி அளித்துள்ளது.
அபிஷேக் மிஸ்ரா என்பவர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்தவர். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இவர், தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். இவர் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது ‘நான் மோடியை ஆதரிக்கிறேன்’ என்ற அணிக்கான விருதை பெற்றவர்.
இவர் நேற்று முன்தினம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘ஓட்டுநர் முஸ்லீம் என்பதால், ‘ஓலாகேப்’ஐ ரத்து செய்துவிட்டேன். நான் எனது பணத்தை ஜிகாதி மக்களுக்கு தரமாட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள ஓலா நிர்வாகம், “நமது நாடு மதச்சார்பற்றது. நாங்கள், எங்கள் ஓட்டுநர்கள், பங்கீட்டாளர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் என யாரையும் ஜாதி, மதம், இனம் அல்லது சமயத்தின் அடிப்படையில் பாகுபாடு படுத்திப் பார்ப்பதில்லை. நாங்கள், எங்கள் வாடிக்கையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பங்கீட்டாளர்களிடம், எல்லோரையும் அனைத்து நேரத்திலும் ஒரே மாதிரியாக மதியுங்கள் என வலியுறுத்துகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.