நாடெங்கும் இன்று நடைபெற்ற 2ம் கட்ட வாக்குப்பதிவில் பல்வேறு இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்ததுடன் நக்சலைட்டுகள் தாக்குதலும் நடைபெற்றது.
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவின்போது பல்வேறு இடங்களில் வன்முறை மூண்டது. சாப்ரா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ்- பாரதிய ஜனதா தொண்டர்கள் இடையிலான மோதலில் வாக்கு இயந்திரங்கள் உடைக்கப்பட்டன. அங்கிருந்த வாக்காளர்கள் சிதறியடித்து ஓடினர். இதையடுத்து காவல் துறையினர் இரு கட்சி தொண்டர்களையும் கைது செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதே பகுதியில் தங்களை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் வாக்களிக்க விடாமல் தடுத்ததாக சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைப்பதற்காக காவல் துறையினர் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இஸ்லாம்பூரில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் முகமது சலீமின் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. திரிணமுல் காங்கிரஸார் இச்செயலில் ஈடுபட்டதாவும் இந்த அராஜகத்தை காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை என்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் குற்றஞ்சாட்டினர். மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கப்பவர்கள் மிரட்டப்பட்டு தாக்கப்பட்டதாகவும் பாரதிய ஜனதா குற்றஞ்சாட்டியுள்ளது.
சட்டீஸ்கரில் ராஜ்நந்த்கான் பகுதியில் நக்சலைட்டுகள் வைத்த குண்டு வெடித்து துணை ராணுவ படை வீரர் ஒருவர் காயமடைந்தார். இதற்கிடையில் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏராளமான வாக்கு இயந்திரங்கள் பழுதடைந்திருந்ததாக குறச்சாட்டு எழுந்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா தொகுதியில் பலர் பர்தா அணிந்து வந்து கள்ள ஓட்டு போட்டதாக அத்தொகுதி பாஜக வேட்பாளர் குற்றஞ்சாட்டினார். ஆனால் அதை மாவட்ட ஆட்சியர் மறுத்துள்ளார். காஷ்மீரின் ஸ்ரீநகரில் வாக்குப்பதிவின் போது பல்வேறு இடங்களில் கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. தேர்தல் புறக்கணிப்புக்கு பிரிவினைவாத இயக்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
தமிழகத்தை பொறுத்தவரை ஆங்காங்கே சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் பெரிய அளவிலான வன்முறைகள் ஏதும் நடக்கவில்லை.