தனது தந்தை விஜயகாந்த் பற்றி பரவும் வதந்திகள் பற்றி அவரது மகன் விஜய் பிரபாகரன் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் பிரபாகரன் தனது ஃபேஸ்புக்கில் ஒரு லைவ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தனது தந்தை விஜயகாந்த் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“எல்லோருக்கும் வணக்கம். நான் விஜய் பிரபாகரன் பேசுறேன். எல்லா செய்திகளிலும் கேப்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று ஒரு நியூஸ் போய் கொண்டே இருக்கிறது. அவர் சீரியஸா இருக்காருன்னு பலர் போடுறாங்க. அதுவெல்லாம் எதுவுமே கிடையாது. அவ்வளவு சீரியஸ்னா நான் அப்பா கூட இருக்கணும். ஆனா நான் என் வேலை விஷயமா நெல்லூருக்கு வந்திருக்கேன். அப்பா வீட்டில் ராஜா மாதிரி ஜம்முன்னு உட்கார்ந்திருக்கிறார். தேவையே இல்லாமல் எங்கள நோண்டிக்கிட்டே இருப்பீங்களா? அவர் மக்களுக்காக மக்களுக்காகனு ஏதோ செய்து கொண்டிருக்கிறார். ஏதோ அவரோட கெட்ட நேரம் அவருக்கு உடம்பு சரியில்லை. ஆமாம் அத ஒத்துக் கொள்கிறேன். ஏதோ அவர் படுத்தப்படுக்கையா இருப்பதை போல நீங்கள் எழுதுவது அவருடைய மகனா எனக்கு வலிக்கிறது.
நானும் இந்தத் தலைமுறையிலதான் இருக்கேன். சோ, சோஷியல் மீடியாவில் வருகின்ற எல்லா செய்திகளையும் நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கேன். அதை படிக்கும் போது எனக்கு வலிக்கிறது. உங்க வீட்ல ஒருத்தருக்கு இதைபோல இருக்கும் போது ஊரே அதை பத்தி பேசினா உங்களுக்கு எப்படி இருக்கும்? இதை எல்லாம் நீங்கள் பேசுறது ரொம்ப தப்பு. அவர் ராஜா மாதிரி வீட்ல இருக்கிறார். நாங்க கண்ணாடியில எங்க முகத்தை பார்ப்பதைவிட அவர் முகத்தைதான் அதிகமா பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு அக்கறையா அவரை நானும் அம்மாவும் கவனித்து கொண்டிருக்கிறோம். அவருக்கு ஒண்ணுமே ஆகாது. நான் அடிச்சு சொல்றேன். நீங்க எதிர்பார்க்கிற மாதிரி பழைய பன்னீர்செல்வமா உங்க எல்லோர் முன்னாடியும் வந்து அவர் நிற்பார். என் உயிரே போனாலும் அவருக்கு ஒண்ணும் ஆகாது.
ஆகவே தேவையே இல்லாமல் இந்த வதந்தி பரப்புவதை தயவு செய்து பண்ணாதீங்க. உங்க வேலையே நிறைய இருக்கும், அதை தயவு செஞ்சு பாருங்க. என் உயிரே போனாலும் எங்க அப்பா உயிருக்கு ஒண்ணுமே ஆகாது. அவர் எப்படி வரணும்னு எதிர்பார்க்கிறீர்களோ அதைவிட 100 மடங்கு அதிகமா திரும்ப வருவார். எனக்கு வேண்டியது நேர்மறையான எண்ணம். கான்ஃபிடெண்ட். எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசுல ஏதாவது ஒன்று உடல் ரீதியாக நடக்கும். அதைபோல அவருக்கும் நடந்துவிட்டது.
அவரால் முடியல. அவர் ஒதுங்கிவிட்டார் என்று சொல்லும் நீங்கதான் முட்டாள். கேப்டன் இல்ல. மீண்டும் சிங்கநடைப்போட்டு அவர் வருவார். அவர் மீது நீங்க வைக்கின்ற தவறான நம்பிக்கையை உடைத்து அவர் வருவார். இது சத்தியம். நீங்க அவரை என்ன பண்ணனும்ணு நினைச்சாலும் அவரை ஒண்ணுமே செய்ய முடியாது. ஏன்னா, அவர் கேப்டன். அமெரிக்கா போய் அவர் முதல் கட்ட சிகிச்சை முடிச்சுட்டு வந்திருக்கார். அடுத்த கட்ட சிகிச்சைக்கு இன்னும் நாலு மாசத்துல போக இருக்காரு. உலகமே பிரம்மிக்க வைப்போம். கேப்டன் எப்படி வருகிறார் என்பதை மட்டும் பாருங்க. தயவு செய்து எந்த வதந்தியையும் நம்பாதீங்க” என்று கூறியிருக்கிறார்.